செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
கர்நாடக மாநிலம் பெங்களூரு வைட் பீல்ட் சாலையில் குந்தலஹாலி பகுதியில் இயங்கி வரும் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் கடந்த 1 ஆம் தேதி குண்டுவெடித்தது. இதில் 9 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், குண்டு வெடிப்பை நிகழ்த்திய நபர் தலையில் வெள்ளை நிற தொப்பி அணிந்தபடியும் முகத்தை கருப்பு நிற முகக் கவசத்தால் மறைத்தபடியும் தப்பிச் செல்லும் காட்சிகள், கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. ஆனால், அந்த நபரின் முகம் தெளிவாக தெரியவில்லை.
இதையடுத்து வெடிகுண்டு துகள்களை, தடயவியல் நிபுணர்கள் ஆய்வுக்கு எடுத்துச் சென்று பரிசோதனை செய்தனர். அதில், பொட்டாசியம் நைட்ரேட் கலந்திருந்தது தெரியவந்தது. குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட அண்டைய மாநிலங்களுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் கர்நாடகா போலீசார், பிற மாநில போலீசாருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகின்றனர்.
இதற்கிடையே கடந்த 2014ல் பெங்களூரு சர்ச் தெரு, 2022ல் மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு ஆகிய சம்பவங்களை நிகழ்த்தியது, ஒரேயொரு நபர்தான் என்பது இங்கே கவனித்தக்கது. அதேபோல், ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பை நிகழ்த்தியதும் ஒரேயொரு நபர்தான். மூன்று குண்டு வெடிப்பு சம்பவங்களும் கிட்டத்தட்ட, ஒரே மாதிரியாகத்தான் நிகழ்த்தப்பட்டுள்ளதாக போலீசார் கணித்துள்ளனர். முன்னதாக நடைபெற்ற இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கும் சிரியாவில் செயல்பட்டு வரும் ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றது. ஆனால் ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இந்நிலையில், இந்தத் தாக்குதலையும் ஐ.எஸ் அமைப்பு நிகழ்த்தியிருக்கலாம் என மத்திய குற்றப்பிரிவு போலீசார் சந்தேகிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குண்டு வெடிப்பு தொடர்பாக, பெங்களூர் போலீஸ் கமிஷனர், எட்டு மண்டல துணை போலீஸ் கமிஷனர்களுடன், அம்மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து அவர் கூறுகையில்.... “குண்டுவெடிப்பு தொடர்பாக போலீஸ் கமிஷனரிடம் இருந்து, முழு தகவலையும் பெற்றுள்ளேன். குண்டுவெடிப்பு நிகழ்த்தியவர் பற்றிய தடயம் கிடைத்துள்ளது. கூடிய விரைவில் அவர் கைது செய்யப்படுவார்” என்றார்.
இதைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் பிடிபட்ட நான்கு பேரையும், மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆடுகோடிக்கு அழைத்துச் சென்று, தனி இடத்தில் வைத்து, துணை போலீஸ் கமிஷனர்கள் சீனிவாச கவுடா, லட்சுமி பிரசாத் ஆகியோர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்துள்ளது உள்துறை அமைச்சகம். அவர்கள் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.