புல்லட் ரயில் என்பது வசதி படைத்த பணக்காரர்களுக்கு மட்டுமே ஏற்றது என்றும் சாமானிய மக்களால் அதனை அதிகளவில் பயன்படுத்த முடியாது என்றும் மெட்ரோ மேன் என பரவலாக அறியப்படும் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் மெட்ரோ ரயில் சேவை என்பது இப்போது பரவலாக வந்துவிட்டது. மின்சார ரயிலை காட்டிலும் மெட்ரோ ரயிலில் வேகமாக பயணிக்க முடியும். பல நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை வந்துள்ள காரணத்தினால் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது என்பது மறுக்கப்படாத உண்மை. மெட்ரோ ரயிலில் சுத்தத்திற்கும் பஞ்சமிருக்காது. டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ய முடியாது. அதற்கேற்றவாறு பாதுகாப்பும் அதிகமாக இருக்கும். இருந்தாலும் மெட்ரோ ரயிலில் கட்டணம் அதிமானதுதான். எனவே ஏதாவது அவசரத்திற்கு மட்டுமே மெட்ரோ ரயில் பக்கம் செல்லுபவர்கள் பலர் இருக்கின்றனர். மற்றபடி அதனை அவர்கள் தவிர்த்து விடுவார்கள்.
மெட்ரோ ரயிலுக்கு அடுத்தக்கட்டமாக புல்லட் ரயிலை 2022-ஆம் ஆண்டுக்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து வருகிறது. அதன்படி நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியும் ஜப்பான் பிரதமர் ஷின்சா அபேவும் சேர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் அடிக்கல் நாட்டினர். அதன்படி அகமதாபாத்- மும்பை இடையே புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இது 1,10,000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. திட்டத்திற்கான 81 சதவிகித தொகையை அதாவது 88 ஆயிரம் கோடி ரூபாயை 0.1 சதவிகித வட்டியில் ஜப்பான் கடனாக வழங்குகிறது. இந்த புல்லட் ரயில் மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் தன்மை கொண்டது.
இந்நிலையில் புல்லட் ரயில் என்பது வசதி படைத்த பணக்காரர்களுக்கு மட்டுமே ஏற்றது என்றும் சாமானிய மக்களால் அதனை அதிகளவில் பயன்படுத்த முடியாது என்றும் மெட்ரோ மேன் என பரவலாக அறியப்படும் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
பேட்டி ஒன்றில் பேசிய அவர், “புல்லட் ரயில் வசதி என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே ஆனது. இங்கு கட்டணம் மிக அதிகமாகத் தான் இருக்கும். தற்போது இந்தியாவின் தேவை என்பது நவீன, சுத்தமான, பாதுகாப்பு நிறைந்த, வேகமான ரயில் அமைப்பு என்பதே உண்மை. அதேபோல பையோ- டாய்லெட், வேகம், சுத்தம் ஆகியவற்றில் இந்தியன் ரயில்வே முன்னேற்ற வளர்ச்சி கண்டுள்ளது என்பதை என்னால் ஏற்க முடியாது. கட்டாயம் ரயிலின் வேகம் இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும். மிகவும் பெருமை வாய்ந்த பல ரயில்களின் சராசரி வேகமே கடுமையாக குறைந்துள்ளது. அதேபோல சரியான நேரத்தில் ரயிலின் வருகை என்பது பெரும்பாலான இடங்களில் சரியாகவே இல்லை” என்றார்.
மேலும் பேசிய அவர், “ ரயில் விபத்துகள் இன்னும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. தண்டவாளங்களை கடக்கும்போது ரயிலில் அடிபட்டு விபத்து நடைபெறுவது இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. வருடத்திற்கு சுமார் 20,000 பேர் நாடு முழுவதும் தண்டவாள விபத்துகளில் உயிரிழக்கின்றனர். பல முன்னேறிய நாடுகளை காட்டிலும் இந்திய ரயில்வே என்பது சுமார் 20 வருடங்கள் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது” என்றார்.
யார் இந்த மெட்ரோ மேன் ஸ்ரீதரன்..?
கொங்கன் இரயில்வே மேம்பாடு, இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் திட்டமான கொல்கத்தா மெட்ரோ திட்டப் பணிகள், டெல்லி மெட்ரோ போன்ற பல திட்டங்களில் இணைந்து பணியாற்றியவர். இதுதவிர இன்னும் பல ரயில்வே திட்டங்களில் முக்கிய பங்காற்றியவர். 86 வயதாகும் இவர் மத்திய அரசின் பத்ம விபூஷண், பத்ம ஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளை வாங்கியவர். நாட்டில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் உயர்தர தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தும் விதமாக அமைக்கப்பட உள்ள குழுவிற்கு ஸ்ரீதரன் விரைவில் தலைமை தாங்க உள்ளார். இதற்கான இவரின் நியமனத்தை பிரதமர் மோடி அண்மையில் உறுதி செய்திருந்தார்.