கேரளா: பேருந்தில் ஆபாசமாக நடந்துகொண்டதாக கைதானவருக்கு ஜாமீன்... பூமாலையுடன் வரவேற்ற ஆண்கள் சங்கம்!

ஓடும் பேருந்தில் பெண் பயணிகள் மத்தியில் ஆபாச நடவடிக்கையில் ஈடுபட்ட இளைஞர், சிறையில் இருந்து ஜாமீன் கிடைத்து வெளியே வந்துள்ளார். அப்போது அவருக்கு கேரளாவைச் சேர்ந்த ஆண்களுக்கான உரிமை சங்கம் பூமாலைப் போட்டு வரவேற்பு அளித்துள்ளது.
Savad
SavadScreengrab
Published on

கடந்த மாதம் கேரள மாநில அரசுப்பேருந்தில், திருச்சூரில் இருந்து கோழிக்கோடு சென்றபோது, மாடலும், இளம் நடிகையுமான நந்திதா சங்கரா என்பவர் முன், அவரது பக்கத்தில் அமர்ந்திருந்த 28 வயதான சாவத் ஷா என்பவர் ஆபாசமாக நடந்துக் கொண்டதாகத் தெரிகிறது. நந்திதா சங்கரா மற்றும் இன்னொரு பெண்ணுக்கு மத்தியில் அமர்ந்திருந்த இளைஞர் சாவத் ஷா, முதலில் நந்திதாவிடம் இயல்பாக பேசுவது போன்று பேச்சுக் கொடுத்துக்கொண்டே தவறாக நடக்க முயன்ற நிலையில், சிறிது நேரத்தில் அவரது கண்முன்னே ஆபாசமாக நடந்துக்கொள்ள முயற்சி செய்துள்ளதாக தெரிகிறது.

Savad Sha-conductor Pradeep
Savad Sha-conductor Pradeep

இதையடுத்து உடனடியாக நந்திதா, தனது செல்ஃபோனை எடுத்து ஃபேஸ்புக்கில் லைவ் வீடியோவாக பதிவுசெய்த நிலையில், அங்கிருந்து வெளியேற இளைஞர் சாவத் ஷா முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து நந்திதா, பேருந்தில் கத்தி கூச்சலிட்டவுடன், பேருந்து நடத்துநர் பிரதீப் அருகில் வந்து விசாரணை செய்துக்கொண்டிருந்தபோதே, பக்கவாட்டு கதவு வழியாக இளைஞர் சாவத் ஷா வெளியேற முயற்சி செய்ததாக தெரிகிறது. இதனால் பேருந்தை நடத்துநர் நிறுத்த சொன்னதும், அவரை தள்ளிவிட்டு ஓட முயற்சிசெய்த நிலையில், சாவத் ஷாவைப் பிடித்து அடித்து, உதைத்து நெடும்பஞ்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார் பேருந்து நடத்துநர் பிரதீப். நந்திதா புகார் அளிக்க ஒத்துக்கொண்டதை அடுத்து பேருந்து நடத்துநர் அவ்வாறு செய்துள்ளார்.

இந்த விவகாரத்தில் கடந்த 18-ம் தேதி கைதுசெய்யப்பட்ட சாவத் ஷா மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இதையடுத்து, சாவத் ஷா சிறையிலிருந்து வெளியே வந்தபோது, அவருக்கு பூமாலை போட்டு ஹீரோ போன்று ‘கேரளா ஆண்களுக்கான உரிமை சங்க’ தலைவர் வட்டியூர்காவு அஜித்குமார் தலைமையில் பல ஆண்கள் வரவேற்பு அளித்துள்ளனர். இதனை அங்கிருந்த சில ஊடங்களும், யூ-ட்யூப் சேனல்களும் படம் பிடித்து வெளியிட்ட நிலையில், அது வைரலாகியுள்ளது.

Savad
Savad online malayali entertainments

பூமாலை போட்டு வரவேற்பு அளித்தப்பின்பே இந்த விவகாரம் மேலும் பரவலாக தெரிய ஆரம்பித்துள்ளது. நடிகை நந்திதா இந்த விவகாரம் குறித்து தனது சமூகவலைத்தளத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பெண்கள் முன்னால் ஆபாசமாக நடந்துக்கொள்ளும் ஆண்கள் மீது பெண்கள் எந்தவித எதிர்ப்பும் காட்டக்கூடாது என்று இந்த ஆண்கள் சங்கம் விரும்புகிறீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார். என்னால் எந்த வேலையையும் செய்ய முடியவில்லை என்றும், தொடர்ந்து வரும் அச்சுறுத்தல்களால் தனது சமூக வலைத்தளப்பக்கங்களை கூட திறக்க முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இதுகுறித்து ஆண்கள் குழு தெரிவிக்கையில், முதலில் அந்தப் பெண்ணுக்கே தாங்கள் ஆதரவு தெரிவித்ததாகவும், ஆனால், அது பொய் புகார் என்று தெரிந்தப் பின்னரே, தற்போது சாவத் ஷாவுக்கு ஆதரவு தெரிவித்து வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com