குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் மீராகுமார் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
மீராகுமார் வேட்புமனு தாக்கல் செய்யும்போது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீத்தாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் சார்பாக டெரெக் ஓ’பிரையன் மற்றும் திமுக, பகுஜன் சமாஜ் கட்சியின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் நிறைவடைவதை ஒட்டி, வரும் ஜூலை 17 ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக சார்பாக ராம்நாத் கோவிந்த் போட்டியிடுகிறார். காங்கிரஸ் உள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகளின் சார்பாக முன்னாள் மக்களவை சபாநாயகரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான மீராகுமார் போட்டியிடுகிறார். அவர் இன்று தேர்தல் ஆணையத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
ஜுன் 30 ஆம் தேதி மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் மீராகுமார் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். காலனி ஆதிக்கத்துக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தின் அடையாளமாக இருக்கும் சபர்மதி ஆசிரமத்திலிருந்து உண்மைக்காகவும், வன்முறையில்லாத சமுதாயத்துக்காகவும் போராட இருப்பதாக அவர் கூறியிருந்தார். நானும் ராம்நாத் கோவிந்தும் போட்டியிடுவதை ஜாதி ரீதியாகப் பார்க்கக் கூடாது. இது தலித்துக்கும், தலித்துக்கும் நடக்கிற போராட்டம் அல்ல. மாறாக இது கொள்கை ரீதியிலான போராட்டம் என்றும் அவர் கூறியிருந்தார்.
மேலும், இதற்கு முன்பு உயர் ஜாதியினர் இந்தப் பதவிக்கு போட்டியிடும்போது அவர்களுடைய ஜாதியைப் பற்றி யாரும் பேசவில்லை. ஆனால் இரண்டு தலித் வேட்பாளர்கள் போட்டியிடும்போது அவர்களுடைய தகுதி, திறமை, வகித்த பதவி, பொறுப்புகள், செய்த பணிகள் ஆகியவற்றைப் பற்றிப் பேசாமல், ஜாதியைப் பற்றி மட்டுமே பேசுகின்றனர் என்றும் அவர் கருத்துத் தெரிவித்திருந்தார்.