“தாய்லாந்து சுரங்கத்தில் நடந்த மீட்பு பணியைவிட மிகவும் சிரமமானது” மத்திய அரசு

“தாய்லாந்து சுரங்கத்தில் நடந்த மீட்பு பணியைவிட மிகவும் சிரமமானது” மத்திய அரசு
“தாய்லாந்து சுரங்கத்தில் நடந்த மீட்பு பணியைவிட மிகவும் சிரமமானது” மத்திய அரசு
Published on

தாய்லாந்து சுரங்கத்தில் நடைபெற்ற மீட்பு பணிகளைவிட மேகாலயாவில் நடைபெற்று வரும் மீட்பு பணிகள் மிகவும் கடினமானது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேகாலயாவில் ஜைன்டியா மாவட்டத்தின் சான் கிராமத்தில் அமைந்துள்ள சுரங்கத்துக்குள், அருகில் உள்ள லைத்தின் ஆற்றில் இருந்து கடந்த 13 ஆம் தேதி தண்ணீர் புகுந்தது. இதையடுத்து சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்களில் 15 பேர் வெளிவர முடியாமல் அதற்குள் சிக்கினர். தேசிய பேரிடர் மீட்புப்படையைச் சேர்ந்தவர்கள் முகாமிட்டு அவர்களை மீட்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். கடந்த மாதம் 24 ஆம் தேதி மழை பெய்ததால் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. 

அனுபவம் வாய்ந்த 21 பேரை கொண்ட ஒடிசா தீயணைப்பு வீரர்கள், நவீன இயந்திரங்களுடன் மேகாலயா சென்றனர். அவர்கள், நீரை வெளியேற்றும் அதிக சக்திவாய்ந்த இழுவைத் திறன் கொண்ட 20 பம்புகளையும் கொண்டு சென்றனர். தேசிய பேரிடர் மீட்பு படையினருடன், ஒடிசா தீயணைப்பு குழு, கடற்படையினரும் ஈடுபட்டு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, தொழிலாளர்களை மீட்பதற்கான பணிகளை விரைவு படுத்த உத்தரவிட கோரி ஆதித்யா என்.பிரசாத் என்பவர் உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். 

இந்நிலையில், தாய்லாந்து சுரங்கத்தில் நடைபெற்ற மீட்பு பணிகளைவிட மேகாலயாவில் நடைபெற்று வரும் மீட்பு பணிகள் மிகவும் கடினமானது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நீதிபதிகள் ஏகே.சிக்ரி மற்றும் அப்துல் நசீர் அமர்வு முன்பு ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷர் மேத்தா இவ்வாறு தெரிவித்தார். “சுமார் 350 அடி ஆழம் வரை இந்த சுரங்கங்கள் உள்ளன. சுரங்கம் தொடர்பான வரைப்படம் எதுவும் இல்லை. அதனால், உள்ளே எத்தனை துளைகள் உள்ளன, அதில் எந்த இடத்தில் தொழிலாளர்கள் சிக்கியுள்ளார்கள் என்பதை கண்டுபிடிப்பது சிரமம்” என்று அவர் கூறினார். 

மேலும் அவர் கூறுகையில், “தாய்லாந்து விவகாரத்தில் குகை குறித்த ப்ளூ பிரிண்ட் இருந்தது. தண்ணீர் மிகவும் சுத்தமாக இருந்தது. ஆனால், இங்கு நீர் எப்படி இருக்கிறது என்பதே மர்மமாக உள்ளது. நிமிடத்திற்கு 1800 லிட்டர் தண்ணீரை வெளியேற்றும் சக்திவாய்ந்த இயந்திரங்களை நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். ஆனால், நாங்கள் நினைத்தது போல் தண்ணீர் அளவு குறையவில்லை. ஏனனென்றால் அருகிலேயே ஆற்றின் இணைப்பு உள்ளது. ஆற்றில் இருந்து 10 அடி கீழே சுரங்கம் உள்ளது. ஆற்றில் இருந்து சுரங்கத்திற்கு வரும் தண்ணீரை தடுக்க முடியவில்லை. ஆற்றிற்கும், சுரங்கத்திற்கும் ஆன இணைப்பு எந்த இடத்தில் உள்ளது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை” என்றார். 

தாய்லாந்தில் உள்ள தாம் லுங் குகைக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23-ஆம் தேதி சென்ற 12 கால்பந்து விளையாடும் சிறுவர்களும் அவர்களது பயிற்சியாளரும் அதில் சிக்கிக் கொண்டனர். குகைக்குள், சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் அவர்கள் சிக்கியிருப்பது, ஒன்பது நாட்களுக்குப் பின்னர், கண்டுபிடிக்கப்பட்டது.

நீண்ட போராட்டத்திற்கு பிறகு அவர்கள் மீட்கப்பட்டனர். அந்த குகையில் வரைப் படங்கள், மீட்பு பணி குறித்த திட்டமும் தெளிவாக பேசப்பட்டது. இந்த செய்தி உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. சிக்கிய அனைவரும் உயிருடன் மீட்கப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com