மளிகை கடை வியாபாரி டூ உலகம் சுற்றும் கேரளத்து பெண்.. யார் இந்த மோலி ஜாய்?

மளிகை கடை வியாபாரி டூ உலகம் சுற்றும் கேரளத்து பெண்.. யார் இந்த மோலி ஜாய்?
மளிகை கடை வியாபாரி டூ உலகம் சுற்றும் கேரளத்து பெண்.. யார் இந்த மோலி ஜாய்?
Published on

பிறந்து வளர்ந்த ஊரிலேயே இருப்பவர்களுக்கு வெளியூருக்கோ, வெளி மாநிலங்களுக்கோ சென்று சுற்றி பார்த்து வருவது எப்போதும் பிடித்தமான ஒன்றாகத்தான் இருக்கும்.

பெருகி வரும் பணிச்சுமையால் எல்லாராலும் எல்லா சமயங்களில் அப்படி ட்ரிப் சென்று வந்துவிட முடியாது. நேரம் கிடைத்தாலும் செலவழிக்க பணம் கிடைக்காமல் போகும். இப்படியாக பல இடையூறுகள் வந்துச் செல்லும்.

ஆனால், கேரளாவைச் சேர்ந்த 61 வயது பெண் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 11 வெளி நாடுகளையும், பல உள்ளூர் பகுதிகளையும் சுற்றிப் பார்த்திருக்கிறார் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? அதுவும் மளிகை கடை நடத்தி அதில் வரும் வருமானத்தை வைத்து சென்று வந்திருக்கிறார்.

எர்ணாகுளத்தின் இரும்பனாம் பகுதியில் உள்ள சித்ரபுழா என்ற பகுதியைச் சேர்ந்தவர் மோலி ஜாய். இவரது கணவர் அதே பகுதியில் கடந்த 26 ஆண்டுகளுக்கு மளிகை கடை தொடங்கி நடத்தி வந்தார். 18 ஆண்டுகளுக்கு முன்பு மோலி ஜாயின் கணவர் இறக்கவே, மளிகை கடை நிர்வாகத்தை அப்பெண் ஏற்று நடத்தி தனது பெண்ணை மணமுடித்தும், மகனை வெளிநாட்டுக்கு படிக்கவும் அனுப்பி வைத்திருக்கிறார்.

அதன் பின்னர் தொடர்ந்து மளிகை கடையை நடத்தி வந்த மோலி ஜாய்க்கு கெடுபிடிகள் என ஏதும் இல்லாததால் தனக்கு வரும் பணத்தை சேமித்து வந்திருக்கிறார். இப்படி இருக்கையில் மோலி ஜாயின் அண்டை வீட்டை சேர்ந்த மேரி என்பவர் அவரிடம் வெளியூருக்கு சுற்றுலா போகலாமா என கேட்க, மோலியும் சரி என்க டிராவல்ஸ் மூலம் ஊட்டி, கொடைக்கானல், மதுரை, மைசூர் என இடங்களுக்கு முதலில் சென்றிருக்கிறார்கள்.

அதன் மூலம் வெவ்வேறு இடங்களை சுற்றிப் பார்க்கும் ஆர்வம் மோலி ஜாய்க்கு தொற்றியது. ஆகையால் வழக்கம் போல வருமானத்தை சேமிப்பதை நிறுத்தாமல் செய்து வந்திருக்கிறார். இந்த நிலையில், அதே பக்கத்து வீட்டு மேரி மோலியை அணுகி வெளிநாடுகளுக்கு சுற்றுலா போகலாமா என கேட்க மோலி ஜாயும் அதற்கு தலையசைத்திருக்கிறார்.

அதற்காக பணம் சேமித்ததோடு, 2010ம் ஆண்டு முதல் முதலில் பாஸ்போர்ட்டுக்கும் விண்ணப்பித்து மோலி பெற்றிருக்கிறார். அப்படிதான் தன்னுடைய முதல் விமான பயணத்தை கடந்த 2012ம் ஆண்டு மோலி ஜாய் அனுபவித்திருக்கிறார். அதன்படி மோலியின் முதல் வெளிநாட்டு பயணமாக ஐரோப்பாவுக்கு 10 நாட்கள் சென்று வந்திருக்கிறார். அதன் பிறகு, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கும் மோலி சென்றிருக்கிறார்.

இதனையடுத்து உள் நாட்டிலேயே டெல்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட இந்தியாவுக்கு அதே டிராவல்ஸ் மூலம் சென்ற மோலி ஜாய், அதன் பிறகு 15 நாள் ட்ரிப்பாக லண்டனுக்கும் சென்றிருக்கிறார். அங்கு நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டெர்டாமில் இருந்து இத்தாலியில் உள்ள ரோம் நகருக்கு கப்பலிலும் சென்று வந்திருக்கிறார்.

கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவிற்கும் 15 நாள் ட்ரிப் சென்றிருக்கிறார். அங்கு, நியூ யார்க், வாஷிங்டன், ஃபிலடெல்ஃபியா, நியூ ஜெர்சி உள்ளிட்ட பல பகுதிகளையும் கண்டு ரசித்திருக்கிறார். இப்படியாக தனது மளிகை கடை மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து எங்கேயும் கடன் வாங்காமல் தனது சுற்றுலா ஆசையை சுயமாகவே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் மோலி ஜாய்.

இடையிடையே தனது நகைகளை அடகு வைத்து சுற்றி பார்க்க சென்றாலும், அதனை முறையாக அடைத்து விடுவாராம். ச்இதுவரை 10 லட்ச ரூபாய் செலவு செய்து 11 நாடுகளை மோலி ஜாய் சுற்றி பார்த்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னுடைய பயணங்கள் குறித்து பிரபல மலையாள செய்தி தளமான மனோரமாவிற்கு அளித்த பேட்டியில் “எங்கள் மளிகை கடையில் விற்கப்படும் சுற்றுலா தொடர்பான ‘வனிதா’என்ற புத்தகத்தை படித்த பிறகே வெளிநாடுகளுக்கு சென்று சுற்றிப்பார்த்திட வேண்டும் என்ற எண்ணம் விதைத்தது. அதன் பிறகு பல டிராவல் புத்தகங்களையும் படித்து தெரிந்துக்கொண்டேன்.

பத்தாம் வகுப்பு மட்டுமே படித்திருக்கும் மோலி ஜாய், தனது பெற்றோர் பள்ளி சார்பிலான சுற்றுலாவுக்கு கூட செல்ல அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் என்னுடைய குறைந்த வருமானத்தை வைத்து இத்தனை நாடுகளை சுற்றிப் பார்த்திருக்கிறேன்.

நான் நன்றாக படித்திருந்தால் சுற்றுலா செல்லும்போது துல்லியமாக ஆங்கிலத்தில் பேச முடிந்திருக்கும். ஆனால் பரவாயில்லை. ஒருவேளை நிறைய படித்து வேறு வேலைக்கு சென்றிருந்தால் என்னால் இப்படி இருந்திருக்க முடியாது” என மோலி ஜாய் கூறியுள்ளார். இளைஞர்கள் பலரின் work-save-travel-repeat என்ற தத்துவத்தை மோலி ஜாய் சரியாக மனதில் ஏற்று அதனை செயல்படுத்தியும் காட்டியிருக்கிறார் என்பதை அவரது பேச்சின் மூலமே தெளிவாகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com