கடந்த 102 ஆண்டுகளாக டெல்லியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் மருத்துவராகி சேவையாற்றி வருகின்றனர்.
நாட்டின் எதிர்காலம் கல்வி மற்றும் சுகாதார சேவைகளின் தரத்தைப் பொறுத்தது என மகாத்மா காந்தி கூறியதை கேட்டு, 1920-ஆம் ஆண்டு லாலா ஜீவன்மால் என்பவர் தனது நான்கு மகன்களையும் மருத்துவராக்க முடிவு செய்தார். அப்போது தொடங்கிய இவர்களின் மருத்துவ சேவை, பல தலைமுறைகளை கடந்து 102ஆண்டுகளாக இந்த குடும்பத்தை சேர்ந்த அனைவரும் மருத்துவராகி மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர்.
மருத்துவ உலகில் பொதுமக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற அர்ப்பணிப்புடன் தொடர்ந்து தங்களது குடும்ப உறுப்பினர்கள் மருத்துவ படிப்பை பயின்று வருவதாக அவர்கள் கூறுகின்றனர் . தற்போது இந்த மருத்துவ குடும்பத்தில் 150 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவர்களாக உள்ளனர். குடும்பத்தில் உள்ள அனைவரையும் மருத்துவராக்கும் மரபை கடைபிடிப்பது மிகவும் சவாலானது என்கிறார் அங்குஷ் சப்பர்வால்.
“கடந்த 102 ஆண்டுகளாக இது நடந்து வருகிறது. ஆனால் இது எளிதான வேலை அல்ல, ஏனெனில் குடும்பத்தின் மகன்களில் ஒருவர் மேலாண்மைப் பட்டப்படிப்பு படிக்கத் தொடங்கினார், ஆனால் பாட்டியின் ஈர்ப்பு மற்றும் குடும்ப சூழ்நிலையால் மகன் நிர்வாகப் படிப்பை விட்டுவிட்டு மருத்துவத் தொழிலைத் தொடர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர் இன்று ஒரு வெற்றிகரமான அறுவை சிகிச்சை நிபுணராக இருக்கிறார்,” என்கிறார் அங்குஷ் சப்பர்வால்.
டெல்லியில் உள்ள இந்த ஜீவன்மால் மருத்துவமனையில் பணம் இல்லை என்பதற்காக எந்த நோயாளியையும் திருப்பி அனுப்புவதில்லை என்ற கொள்கையை கடைபிடிப்பதாக அவர்கள் கூறுகின்றனர். குடும்பத்தின் மருமகள்களும் மருத்துவர்களாக இருப்பார்கள் என்றும் அவர்களும் குடும்ப மருத்துவமனையில் சேர்வார்கள் என்றும் வினய் சப்பர்வால் கூறுகிறார். கொரோனா கால கட்டத்தில் இந்த மருத்துவ குடும்பத்தை சேர்ந்த இரண்டு மருத்துவர்கள் உயிரிழந்த சோகமும் நடந்தது. இருப்பினும் தங்களது சேவை இன்னும் பல ஆண்டுகள் தொடரும் என அவர்கள் கூறுகின்றனர்.