கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக எல்லைப் பகுதிகளில் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு உறுதியான நிலையில், தேனி மாவட்டம் போடி முந்தல் சோதனைச் சாவடியில் நடமாடும் மருத்துவக் குழுவினர் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இந்த நடமாடும் மருத்துவக் குழுவில் ஒரு மருத்துவர் மற்றும் 5 செவிலியர்களும் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் கேரளாவிலிருந்து வரும் அனைத்து வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கும் காய்ச்சல் உள்ளிட்ட நோய்த்தொற்று இருக்கிறதா என பரிசோதனை செய்கின்றனர்.
இதேபோல்அம்மாநில எல்லையையொட்டியுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளா சென்று வந்தவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்படுகிறது. மேலும் இரு மாநில எல்லையிலும் கிராமம், கிராமமாக சுகாதாரத்துறை, வருவாய்த்துறையினர் ஆய்வு நடத்திவருகிறார்கள்.
ஓராண்டுக்கு முன்னர் கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்புக்கு 17 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் நிபா பாதிப்பு தென்பட்டுள்ளது. 23 வயது கல்லூரி மாணவர் ஒருவருக்கு நிபா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உயிரை பறிக்கக்கூடிய ஆபத்தான இந்த நிபா வைரஸ் பாதிப்பை அடுத்து, பல்வேறு மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்புகளோடும், நிபா அறிகுறியோடும் உள்ள 311 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.