நிமோனியா தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “நாடு முழுவதும் நிமோனியா தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாக அண்மையில் தேசிய நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது. மகாராஷ்டிராவின் எஸ்.ஐ.ஓ. உள்ளிட்ட மாநில சுகாதார அதிகாரிகளை மேற்கோள் காட்டி, ஒரு மாதத்திற்கு மேலாக நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளுக்கு கால அட்டவணைப்படி தடுப்பூசி செலுத்துவதற்கு இது இடையூறாக இருக்கிறது என்று செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்த செய்தி தவறானது. 2022 அக்டோபர் 7 வரையிலான புள்ளி விவரங்கள் படி போதுமான பிசிவி தடுப்பூசி டோஸ்கள் இருப்பில் உள்ளன.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 70,18,817 டோஸ் பிசிவி இருப்பில் உள்ளது. இது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 3,01794 டோஸ்களையும் உள்ளடக்கியதாகும். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சுகாதார நிர்வாகத் தகவல் முறை புள்ளிவிவரத்தின்படி 2022 ஜனவரி முதல் 2022 செப்டம்பர் வரையிலான காலத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டதில் மொத்தம் 3,27,67,028 (3.27 கோடி) டோஸ் பிசிவி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மகாராஷ்டிரா மாநிலத்தில் பயன்படுத்தப்பட்ட 18,80,722 பிசிவி டோஸ்களையும் உள்ளடக்கியதாகும்.
2023 ஆம் ஆண்டுக்கு மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் பிசிவி கொள்முதலும் விநியோகமும் தொடங்கியுள்ளது. குழந்தைகள் இறப்பு விகிதத்திற்குப் பெரும் காரணங்களில் ஒன்றாக நிமோனியா உள்ளது. எனவே இந்த பிரச்சினையை தீவிரமாக எதிர்கொள்ள மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நிமோனியா தடுப்பூசி 2017-ல் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது.
மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பீகார், இமாச்சலப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் படிப்படியாக செயல்படுத்தப்பட்டது. பின்னர் அனைவருக்கும் தடுப்பூசி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பிசிவி தடுப்பூசி விரிவுபடுத்தப்பட்டது. தற்போது இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக பிசிவி உள்ளது. 27.1 மில்லியன் குழந்தைகளுக்கு பிறந்தவுடன் இது இலவசமாக அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.