மத்தியில் ஆட்சியமைக்கக் காரணமாக இருக்கும் மிகப்பெரிய சக்திகளில் ஒன்றாக விளங்கக்கூடியது உத்தரப்பிரதேச மாநிலம். காரணம், இங்கு மட்டும்தான் நாட்டிலேயே மிக அதிகமான மக்களவைத் தொகுதிகள் (80) உள்ளன. அப்படியான இந்த மாநிலத்தில் கடந்த இரண்டு தேர்தல்களிலும் பாஜக அதிகளவில் தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. ஆனால், இந்த முறை மாநிலத்தில் இரண்டு முறை ஆட்சியைத் தக்கவைத்த பாஜகவால் அதிக தொகுதிகளைப் பெற முடியவில்லை. இதனாலேயே இந்த முறை, தனிப் பெரும்பான்மையை இழந்ததுடன் கூட்டணிக் கட்சிகளுடன் ஆட்சியமைக்க முடிவு செய்திருக்கிறது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில், I-N-D-I-A கூட்டணியின் சமாஜ்வாதி 37, காங்கிரஸ் 6 தொகுதிகள் என மொத்தம் 43 தொகுதிகளை கைப்பற்றியுள்ளன. பாஜக கூட்டணி 36 இடங்களைப் பெற்றள்ளது. இதில் பாஜக வெறும் 33 இடங்களிலேயே வெற்றி பெற்றுள்ளது. எனினும், இம்மாநிலத்தின் இன்னொரு பெரிய கட்சியான மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை என்றாலும், 16 தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்றுள்ளது. பாஜக போட்டியிட்ட 14 தொகுதிகள், கூட்டணிக் கட்சிகளான ராஷ்ட்ரீய ஜனதா மற்றும் அப்னா தளம் ஆகியவை போட்டியிட்ட 2 தொகுதிகள் என மொத்தம் 16 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி பெருவாரியான வாக்குகளை பெற்றுள்ளது. ஒருவேளை, காங்கிரஸ் கூட்டணியில் பகுஜன் சமாஜ் இடம்பெற்றிருந்தால், உத்தரப் பிரதேசத்தில் மேலும் 16 தொகுதிகளை பாஜக கூட்டணி இழந்திருக்கும்.
அக்பர்பூர், அலிகார், அம்ரோஹா, பன்ஸ்கான், பதோஹி, டியோரியா, டூமாரியான்கஞ்ச், பருஹாபாத், பதிப்பூர் சிக்ரி, ஹர்டோய், மிர்சாபூர், மிஸ்ரிக், புல்பூர், சாஜான்பூர், உன்னாவ் உள்ளிட்ட 16 தொகுதிகளில் வெற்றிபெற்ற பாஜக வேட்பாளர்களுக்கும், 2ம் இடம் பிடித்த பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கும் இடையேயான வித்தியாசம் என்பது மிகவும் குறைவாக உள்ளது. ஆனால் இந்த ஓட்டு வித்தியாசத்தைவிட அந்ததந்த தொகுதிகளில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் அதிக ஓட்டுகளை பெற்றுள்ளனர்.
இதனால் தான் மாயாவதியால் 16 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களிடம் i-n-d-i-a கூட்டணி வேட்பாளர்கள் வீழ்ந்துள்ளனர். இந்த கூட்டணியுடன் மாயாவதி நிச்சயம் கூட்டணி வைத்திருந்தால், அந்த கூட்டணிக்கு மேலும் பல இடங்கள் உத்தரப்பிரதேசத்தில் கிடைத்து, பாஜகவைவிட ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பைப் பெற்றிருக்கும். ஆனால் அதற்கும் மாயாவதியின் கட்சி தடைபோட்டுவிட்டது.
உத்தரப்பிரதேசத்தில் மட்டும் பகுஜன் சமாஜ் கட்சி 17 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. நாடு முழுவதும் அதிகளவில் 35 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது ஒரே கட்சி பகுஜன் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.