பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் துணைத்தலைவராக தனது தம்பியையும், ஒருங்கிணைப்பாளராக மருமகனையும் அக்கட்சித் தலைவர் மயாவதி நியமித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் இன்று பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் மயாவதி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் எம்.பிக்கள், எல்.எல்.ஏக்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் வாக்கு இயந்திர முறைக்கு பதிலாக, வாக்கு சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அத்துடன் கட்சியின் நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக பல அதிரடி அறிவிப்புகளும் வெளியானது. அதன்படி, கட்சியின் துணைத் தலைவராக தனது தம்பி ஆனந்த் குமாரையும், தேசிய ஒருங்கிணைப்பாளராக மருமகன் ஆகாஷ் ஆனந்தையும் மாயாவதி நியமித்துள்ளார். அத்துடன் கட்சியின் முன்னாள் துணைத்தலைவர் ராம்ஜி கவுதமையும் தேசிய ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்துள்ளார். மேலும், உத்தரப்பிரதேசத்தின் ஆரோஹா தொகுதி எம்பி தனிஷ் அலியை கட்சியின் மக்களவைத் தலைவராகவும், எம்.பி கிரிஷ் சந்திராவை கொறடாவாகவும் தேர்வு செய்துள்ளார்.
இதனையடுத்து, காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகளின் வரிசையில் மாயாவதியும் குடும்ப அரசியல் செய்வதாக அம்மாநில பாஜக விமர்சித்துள்ளது.