நரோடா பாட்டியா வன்முறை வழக்கில் அம்மாநில முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
2002-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் நடந்த மறுநாள், நரோடா பாட்டியா என்ற இடத்தில் வன்முறை வெடித்தது. இதில் 97 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலோனார், கர்நாடகா மற்றும் மகாராஷ்ட்ராவில் இருந்து வந்தவர்கள். இது தொடர்பான வழக்கில் நரேந்திர மோடி அமைச்சரவையில் இருந்த மாயா கோட்னானி, முன்னாள் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பாபு பஜ்ரங்கி உள்பட 70 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், கடந்த 2012-ம் ஆண்டு மாயா, பஜ்ரங்கி உட்பட 32 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. இதில் மாயாவுக்கு 28 ஆண்டு சிறைத் தண்டனையும் பாபு பஜ்ரங்கி உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதையடுத்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் குஜராத் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஹர்ஷ் தேவானி தலைமையிலான அமர்வு, முன்னாள் அமைச்சர் மாயா மற்றும் அவரது உதவியாளர் உள்ளிட்ட 15 பேரை வழக்கில் இருந்து விடுவித்தது. சிறப்பு நீதிமன்றம் வழங்கிய 28 ஆண்டு சிறை தண்டனையையும் ரத்து செய்து உத்தரவிட்டது.
ஆனால், விஸ்வ இந்து பரிஷத் மூத்த தலைவர் பாபு பஜ்ரங்கிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்தது.