"தலைமை தளபதி 65-வது வயது வரை பதவி வகிப்பார்" மத்திய அரசு அறிவிப்பு

"தலைமை தளபதி 65-வது வயது வரை பதவி வகிப்பார்" மத்திய அரசு அறிவிப்பு
"தலைமை தளபதி 65-வது வயது வரை பதவி வகிப்பார்" மத்திய அரசு அறிவிப்பு
Published on


இந்தியாவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தலைமை தளபதியின் பதவிக்காலம் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி தலைமை தளபதியாக பதவியேற்பவர் தனது 65 வயது வரை பதவியில் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள முப்படைகளுக்கும் சேர்த்து ஒரே தலைமை தளபதியை நியமிப்பதற்கு மத்திய அமைச்சரவை கடந்தவாரம் ஒப்புதல் அளித்தது. இதன்படி, பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் ராணுவ விவகாரம் என்ற தனித்துறை உருவாக்கப்பட்டு, அதன் தலைவராக தலைமை தளபதி செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தலைமை தளபதிக்கான தகுதிகளை ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தலைமை தளபதி தனது 65 ஆவது வயது வரை அந்த பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுவரை, முப்படை தளபதிகளின் அதிகபட்ச வயது வரம்பு 62 ஆக இருந்து வருகிறது. மேலும், தலைமை தளபதியாக நியமிக்கப்படுபவர், தனது பதவிக்காலத்துக்குப் பிறகு எந்த அரசு பணியிலும் நியமிக்கப்படமாட்டார் என்றும், ஓய்வுபெற்ற பிறகு 5 ஆண்டுக்குள் தனியார் பணியில் சேர விரும்பினால் உரிய அனுமதி பெற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகளில்‌‌ யார் வயதில் மூத்தவரோ அவரே முப்படைத் தளபதிகளின் தலைவராக இருந்து வருகிறார். தற்போது ராணுவத் தளபதியாக இருக்கும் பிபின் ராவத் அந்தப்பதவியை வகித்து வருகிறார். அவர் நாளை ஓய்வு பெறுவதால் அடுத்த இடத்தில் உள்ள கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் முப்படைத் தளபதிகளின் தலைவராவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் பிபின் ராவத் தலைமைத் தளபதியாக நியமிக்கப்படுவது உறுதியாகிவிட்டது. விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக்கூறப்படுகிறது. மேலும் அவரே முப்படைத் தளபதிகளின் தலைவராகவும் நீடிப்பார் எனத் தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com