‘மாத்ருபூமி’ ஆசிரியர், மனைவி மீது கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்

‘மாத்ருபூமி’ ஆசிரியர், மனைவி மீது கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்
‘மாத்ருபூமி’ ஆசிரியர், மனைவி மீது கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்
Published on

கேரளாவில் பிரபல பத்திரிகையான மாத்ருபூமியின் ஆசிரியர் மற்றும் அவரது மனைவி மீது கொள்ளையர்கள் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளாவில் மிகவும் பிரபலமான பத்திரிகை ‘மாத்ருபூமி’. மாத்ருபூமியில் கன்னூர் பிரிவின் செய்தி ஆசிரியராக பணியாற்றுபவர் வினோத் சந்திரன். இவரது வீட்டில் 4 கொள்ளையர்கள் நேற்று கொள்ளையடிக்கச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் அதிகாலை 1.30 முதல் 3.30 வரை நடைபெற்றதாக கன்னூர் நகர போலீஸ் அதிகாரி பிரதீபன் கன்னிப்பொயில் கூறினார்.

முதலில் வீட்டின் முன்புற கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே சென்றுள்ளனர். சத்தம் கேட்கவே வினோத், அவரது மனைவி சரிதா தங்களது அறையில் இருந்து வெளியே வந்து பார்த்துள்ளனர். அவர்கள் வெளியே வந்தவுடன் கொள்ளையர்கள் இருவரையும் கயிற்றால் கட்டியுள்ளனர். அதேபோல், கண்களையும், வாயையும் மூடியுள்ளனர். 

பின்னர், வினோத் சந்திரன் வீட்டில் இருந்து நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். கொள்ளையர்கள் சென்றவுடன் வினோத் மற்றும் அவரது மனைவி தங்களை கட்டியிருந்த கயிறை எப்படியோ அவிழ்த்துள்ளனர். பின்னர், உடனடியாக போலிசாருக்கு போன் செய்துள்ளனர். போலீசார் உடனடியாக அவர்கள் வீட்டிற்கு வந்துள்ளனர். வினோத் மற்றும் அவரது மனைவி இருவருக்கும் கழுத்து, முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. இதனையடுத்து, கன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். 

இந்தச் சம்பவம் குறித்து ஆசிரியர் வினோத் சந்திரன் தி நியூஸ் மினிட்டிடம் கூறுகையில், “அவர்கள் எனது கண்களையும், வாயையும் கட்டிவிட்டு கடுமையாக தாக்கினர். அதேபோல், எனது மனைவியையும் தாக்கினர். அவர்கள் சென்றவுடன் நாங்கள் எங்களை கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்துவிட்டோம். இல்லையென்றால் நாங்கள் இறந்திருப்போம். அவர்கள் எங்களை கட்டிப் போட்டப் பின்னர் சுமார் ஒரு மணி நேரம் எங்கள் வீட்டில் இருந்தனர். 35 ஆயிரம் ரூபாய் பணமும், 25 சவரன் தங்க நகைகளையும் அவர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். எங்களது ஏடிஎம் காடுகள், லேப்டாப் மற்றும் மொபைல் போன்களையும் அவர் திருடிச் சென்றனர்” என்றார். 

இந்தச் சம்பவம் குறித்து கன்னூர் போலீஸ் அதிகாரி பிரதீபன் கூறுகையில், “இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கேராளவிற்கு வெளியில் இருந்து வந்தவர்கள் என்று தெரிகிறது. அவர்கள் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.

தகவல்: the news minute

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com