மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) சுவாசப் பிரச்னை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமானதால், செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
எய்ம்ஸ் மருத்துவமனையில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்ததுடன், தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. என்றாலும், சீதாராம் யெச்சூரியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (செப்.12) காலமானார். அவரது மறைவுக்குப் பல்வேறு கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
1952ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். ஆரம்பத்தில் அவரது தந்தை ஆந்திர மாநிலத்தில் சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் பொறியாளராகப் பணியாற்றியதால், ஆரம்ப கல்வியை (விஜயவாடா மற்றும் ஹைதராபாத்) சீதாராம் அங்கேயே முடித்தார். பின்னர், ஜனாதிபதி தோட்டப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியை முடித்த அவர், டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரத்தை முடித்தார். அதன்பிறகு, பின்னர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) பொருளாதாரத்தில் எம்ஏ பட்டம் பெற்றார்.
சீதாராம் யெச்சூரியின் அரசியல் பயணம் 1974ஆம் ஆண்டு இந்திய மாணவர் கூட்டமைப்பில் (SFI) இணைந்ததன் மூலம் தொடங்கியது. மூன்று முறை JNU மாணவர் சங்கத்தின் தலைவராக உயர்ந்த அவர், பின்னாளில் SFIஇன் அகில இந்திய தலைவரானார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தபோதே 1975 ஆம் ஆண்டு எமர்ஜென்சியின் போது கைது செய்யப்பட்ட பின்னர் யெச்சூரி பிரபலமடைந்தார். அதைத் தொடர்ந்து, 1984ஆம் ஆண்டு CPI(M)இன் மத்திய குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, 1992 வாக்கில், அவர் பொலிட்பீரோ உறுப்பினராக இருந்தார்.
இந்தியாவின் அரசியல் நிலப்பரப்பை வடிவமைப்பதில் சீதாராம் யெச்சூரி முக்கியப் பங்கு வகித்தார். அவர் 1996இல் ஐக்கிய முன்னணி அரசாங்கத்திற்கான பொது குறைந்தபட்ச திட்டத்தை உருவாக்குவதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துடன் நெருக்கமாக பணியாற்றினார்.
அதுபோல், 2004இல் UPA அரசாங்கத்தின் பொது குறைந்தபட்ச திட்டத்தை உருவாக்க காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷுடனும் இணைந்து பணியாற்றினார். சீதாராம் யெச்சூரி 2005 முதல் 2017 வரை மேற்கு வங்காளத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றினார். பிரகாஷ் காரத்தை அடுத்து 2015இல் CPI(M) பொதுச் செயலாளராகப் பதவியேற்றார்.
முன்னாள் பொதுச் செயலாளர் ஹர்கிஷன் சிங் சுர்ஜீத்திடமிருந்து கூட்டணிக் கட்டமைப்பின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக அறியப்பட்டவர். மேலும் 2018 மற்றும் 2022இல் இரண்டு முறை அந்தப் பதவிக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எல்லாருக்கும் அன்பான நபராக அறியப்பட்ட யெச்சூரி, கருத்தியல் பிளவுகள் ஏற்பட்டபோதும் அதற்காக கட்சியில் இருந்து விலகியதில்லை. யெச்சூரி ஒரு சிறந்த எழுத்தாளராகவும் வலம் வந்தார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியின் இரண்டு வாரப் பத்திரிகையான பீப்பிள்ஸ் டெமாக்ரசியின் ஆசிரியராக இருந்துள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு கொரோனா தொற்றின்போது தனது மகன் ஆஷிஷை அவர் இழந்ததிலிருந்து மிகவும் துயருற்றிருந்தார். யெச்சூரி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
யெச்சூரி தாம் பழகும் நபர்களிடம், அவரவர் தாய்மொழிகளான இந்தி, பெங்காலி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பேசக்கூடியவர். சுர்ஜித் மற்றும் ஜோதிபாசு ஆகியோரின் மிகுந்த அபிமானியாக இருந்தார். ஒருமுறை இவரது திறமை குறித்து ஜோதிபாசு, ”இந்த மனிதர் [யெச்சூரி] ஆபத்தானவர். அவர் வெவ்வேறு மொழிகளில் பேசுகிறார். இங்கே பல மொழிகள் பேசுபவர்கள் அமர்ந்திருந்தாலும், யெச்சூரி மற்றவர்களுக்கு என்ன சொல்கிறார் என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடியாது” எனத் தெரிவித்திருந்தார்.