பிரிக்க முடியாத அளவிற்கு மகராஷ்ட்ரா அரசியலில் மராத்தாக்களின் இடஒதுக்கீடு போராட்டம் கடந்த சில பத்தாண்டுகளாக இடம்பெற்று வருகிறது. தொடர் போராட்டங்களின் காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 16% இடஒதுக்கீடு வழங்கி மகாராஷ்ட்ர மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது எஸ்சிபிசி 2018 (Socially and Educationally Backward - SEBC) ஆம் ஆண்டு சட்டம் எனப்பட்டது.
மகராஷ்ட்ராவில் 52% இடஒதுக்கீடு அமலில் இருக்கும் சூழலில் மராத்தா சமூகத்தினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டையும் சேர்த்தால் மொத்தமாக 68% இடஒதுக்கீடாக உயரும் என்றும் கூறப்பட்டது.
52 சதவிதம் இடஒதுக்கீடு முழுவிபரம்:
எஸ்.சி (SC & SC Converts to Buddhism ) - 13
எஸ்.டி (ST including those living outside specified areas) - 7
ஓபிசி (OBC – Other Backward Class) - 19
எஸ்பிசி (SBC – Special Backward Class) - 2
விஜே (Vimukta Jati /Denotified Tribes) - 13
என் டி - பி (Nomadic Tribes – B) - 2.5
என்.டி - சி Dhangar – (Nomadic Tribes-C) - 3.5
என்.டி டி Vanjari – (Nomadic Tribes-D) - 2
மொத்தம் 52 சதவிதம்
தற்போது எதிர்பார்க்கப்படுவது:
SEBC – Socialy And Educationally Backward Class Of Citizend - 16 %
இதையும் சேர்த்தால் 68 % ஆக மாறும்
ஆனால், 2021ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அந்த சட்டத்தை செல்லாது என அறிவித்து தீர்ப்பளித்தது. அந்த சட்டம் அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 16ல் உள்ள சமத்துவத்திற்கு முரணானது என்றும் கூறியது.
இதனை அடுத்து மராத்தா சமூக மக்கள் இடஒதுக்கீடு வேண்டும் என அவ்வப்போது போராட்டம் ஆர்ப்பாட்டம் போன்றவற்றில் ஈடுபட்டு வந்தனர். தற்போது மீண்டும் இடஒதுக்கீட்டிற்கான வலியுறுத்தல்கள் அதிகரித்து வந்தன.
இந்நிலையில் இடஒதுக்கீடு கேட்டு ஜல்னா மாவட்டத்தில் உள்ள அண்டர்வாலி கிராமத்தில் மனோஜ் ஜராங்கே என்பவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி இன்றுடன் 10 நாள் ஆகும் நிலையில் அதை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அம்மாநில அமைச்சரவை ஈடுபட்டு வருகிறது.
மனோஜ் பாட்டீலை அப்புறப்படுத்தி மருத்துவமனையில் சேர்க்க கடந்த வாரம் போலீசார் அன்டர்வாலி கிராமத்துக்கு சென்றனர். அப்போது அங்கு திரண்டு இருந்த மக்கள் மனோஜ் பாட்டீலை மருத்துவமனைக்கு அழைத்து செல்லவிடாமல் போலீசாரை தடுத்தனர். இதையடுத்து அங்கு வன்முறை வெடித்தது. கூட்டத்தைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசியும், தடியடி நடத்தியும் பார்த்தனர்.
ஆனால், நிலைமை வேறுவிதமாக மாறியது. பல வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இந்த வன்முறையில் போலீசார் உள்பட 40 பேர் காயம் அடைந்தனர். இதனையடுத்து, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அதற்கு மன்னிப்பு கோரினார். இந்த விவகாரம் முதல்வர் ஷிண்டே தலைமையிலான அரசுக்கு நெருக்கடியாக மாறியுள்ளது. அதேபோல், பாஜகவிற்கு இது தேர்தலில் எதிரொலிக்கும் என்ற அச்சம் இருப்பதால் தீர்வு காண்பதற்கு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
”நிஜாம் காலத்தில் வழங்கப்பட்ட ஆவணங்களை வைத்திருக்கும் மராத்திகளுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான குன்பியின் பிரிவில் சேர்க்கப்ப்படுவார்கள்” என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.
”அரசின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். இருப்பினும் அதில் சில மாற்றங்கள் வேண்டும். மாற்றங்கள் செய்யும் வரை என்னுடைய உண்ணாவிரதப் போராட்டம் தொடரும்” என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மனோஜ் ஜரங்கே பட்டில் கூறியுள்ளார்.
மராத்தாக்களுக்கும் ஏற்கனவே இருக்கும் இதர பிறபடுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் கூடுதலாக சலுகை வழங்க மற்ற பிரிவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து பேசியிருக்கும் ஓபிசி ஜன் மோர்ச்சா தலைவர் பிரகாஷ் ஷெண்ட்ஜே, ஓபிசி பிரிவிவில் மராத்தாக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க அனுமதிக்க முடியாது என்றும் அப்படி செய்தால் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.