மகாராஷ்டிரா தேர்தல் | விலகிய மராத்தா சமூகத் தலைவர்.. பின்னணி காரணம் என்ன?

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முடிவை கைவிடுவதாகவும் வேட்பாளர்களை திரும்பப் பெறுவதாகவும் மராத்தா சமூக தலைவரான மனோஜ் ஜராங்கே அறிவித்துள்ளார்.
மனோஜ் ஜராங்கே
மனோஜ் ஜராங்கேஎக்ஸ்
Published on

மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் பாஜக துணையுடன் சிவசேனாவில் இருந்து பிரிந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. 288 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவையின் 5 ஆண்டு பதவிக்காலம் வருகிற நவம்பர் மாதம் 26-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.

இதையடுத்து, அம்மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி நவம்பர் 20ஆம் தேதி ஒரேகட்டமாக மகாராஷ்டிரா தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நவம்பர் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அது தெரிவித்துள்ளது. இதையடுத்து அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மகா விகாஸ் அகாடிக்கும், பாஜக அங்கம் வகிக்கும் மஹாயுதி கூட்டணிக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது. இதனிடையே, மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முடிவை கைவிடுவதாகவும் வேட்பாளர்களை திரும்பப் பெறுவதாகவும் மராத்தா சமூக தலைவரான மனோஜ் ஜராங்கே அறிவித்துள்ளார்.

மராத்தா சமூக தலைவரான மனோஜ் ஜராங்கே, மராத்தா சமூகத்தினரின் இடஒதுக்கீட்டுக்காக காலவரையற்ற உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்திவருகிறார். அவர், இதுவரை 7 போராட்டங்களை நடத்தியுள்ளார். மராத்தா சமூகத்தினரின் இடஒதுக்கீட்டை மறுத்ததாக ஆளும் பாஜக கூட்டணியை மனோஜ் ஜாரங்கே, சமீபத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார். முன்னதாக, மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக மராதா சமூகத்தினரின் வாக்குகளும், மனோஜ் ஜராங்கேவின் போராட்டமும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மனோஜ் ஜராங்கே
மகாராஷ்டிரா: தொகுதிப்பங்கீட்டில் இழுபறி.. பாஜக கூட்டணியில் குழப்பம்.. ஸ்டெடியாக எதிர்க்கட்சியினர்..

இந்த நிலையில், மனோஜ் ஜாரங்கே தரப்பினரும் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால், தற்போது வேட்பு மனுவை வாபஸ் பெறுவதாகவும், தேர்தலில் போட்டியிடும் முடிவை திரும்பப் பெறுவதாகவும் மனோஜ் ஜராங்கே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “மற்றவர்களை தோற்கடிப்பதற்காக எனது சமூகத்தின் செல்வாக்கைப் பயன்படுத்த விரும்பவில்லை. பலமுறை யோசித்த பிறகு, மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளேன். மராத்தா சமூக மக்கள் தங்களின் எதிரிகளை அடையாளம் கண்டு, அவர்களே யாரை தோற்கடிக்க வேண்டும், யாரை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று முடிவு எடுக்க வேண்டும். யாரும் எனக்கு அழுத்தம் தரவில்லை.

மராத்தா சமூகத்தினருக்கு நன்மை செய்பவர்களை மக்களே தேர்ந்தெடுக்கட்டும். மராத்தா மக்களை துன்புறுத்தியவர்களுக்கு தேர்தல் மூலம் நாம் பாடம் புகட்டவேண்டும். ஒரு சமூகத்தினரின் வாக்கை மட்டும் நம்பி தேர்தலில் களமிறங்க முடியாது. நாங்கள் அரசியலுக்கு புதியவர்கள். நாங்கள் வேட்பாளர்களை நிறுத்தினால் தோற்கடிக்கப்படுவோம். அது எங்கள் சமூகத்தினருக்கு அவமானம். எனவே, வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களை திரும்பப் பெற வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மனோஜ் ஜராங்கே
மராத்தா இடஒதுக்கீடு| உண்ணாவிரதத்தைத் திடீரென முடித்துக்கொண்ட மனோஜ் ஜராங்கே.. காரணம் என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com