LOCAL CIRCLES என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிதி மோசடி குறித்து 302 மாவட்டங்களில் 23 ஆயிரம் பேரிடம் கேட்டறிந்ததாக தெரிவித்துள்ளது. இதில், கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளில் மோசடியை சந்தித்ததாக 43 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
குறிப்பாக, கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளின்போது அங்கீகரிக்கப்படாத கட்டணங்கள் தங்களிடம் வசூலிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்ததாக கூறியுள்ளது. மேலும் யூபிஐ பரிவர்த்தனைகள் செய்யும்போது தாங்கள் ஏமாற்றப்பட்டதாக 36 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
சென்ற நிதியாண்டில் நிதிமோசடிகள் 166 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்ததை சுட்டிக்காட்டியுள்ள அந்நிறுவனம், 10 இந்தியர்களில் 6 பேர் நிதி மோசடிகளை சந்தித்திருப்பதாக கூறியுள்ளது. எனவே, நிதி மோசடிகளில் இருந்து தற்காத்துக்கொள்ள வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசரத் தேவை ஏற்பட்டுள்ளதாகவும் LOCAL CIRCLES தெரிவித்துள்ளது.