கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் மகனுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கோவாவிலுள்ள நெத்ராவாலி வனவிலங்கு காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் விடுதி ஒன்று அமைக்கப்படவுள்ளது. அதை கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகன் அபிஜாத் பாரிக்கர் அமைக்கவுள்ளார். இதற்காக அந்தக் காப்பக பகுதியில் நிலம் வாங்கியுள்ளார்.
இந்நிலையில் இந்த விடுதி அமைப்பது தொடர்பாக அபிஜித் தேசாய் என்பவர் பாம்பே உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் இந்த விடுதி கட்டப்படுவதற்கு தடை கோரியிருந்தார். மேலும் அந்த மனுவில்,“இந்த விடுதி அமைப்பதற்காக வனப்பகுதி தவறான முறையில் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திட்டத்திற்காக சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளது. இதற்காகவே அவசரச் சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது. இந்த விடுதி அமைய 90,000 சதுர அடி நிலம் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டுள்ளது ” எனக் கூறியுள்ளார்.
இதனையடுத்து இந்த மனுவை பாம்பே உயர்நீதிமன்றத்தின் பனாஜி அமர்வு விசாரித்தது. இந்த அமர்வு இந்த வழக்கு குறித்து விளக்கம் அளிக்க கோரி அபிஜாத் பாரிக்கருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த கோவா மாநில பாஜக தலைவர் வினய் டெண்டுல்கர், “இந்த விடுதி அமைப்பதில் எந்தவிதமான சட்ட மீறல்களும் இல்லை. மேலும் மனோகர் பாரிக்கர் மற்றும் அவரது மகன் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது” எனக் கூறினார்.