தொடரும் கலவரம்.. திரும்பாத அமைதி: மணிப்பூரில் வாழும் தமிழ் மக்களின் நிலை என்ன? நேரடி ரிப்போர்ட்!

மணிப்பூரில் இன்னும் அமைதி திரும்பவில்லை, கலவரம் நீடிக்கும் அந்த மாநிலத்தில் தமிழர்களும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் வாழும் பகுதியின் நிலவரம் என்ன? எப்படிப்பட்ட சூழலில் அவர்கள் வாழ்கிறார்கள் என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்ப்போம்.

குக்கி பழங்குடி மக்களும், மெய்தி மக்களும் பல நுற்றாண்டுகளாக சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வந்ததுதான் கடந்த காலங்களில் கண்டிருக்கிறோம். ஆனால், இப்போது நிலைமை அப்படி இருக்கவில்லை. தலைநகர் இம்பாலிலேயே எரிக்கப்பட்டும், சிதைக்கப்பட்ட நிலையிலும்தான் கட்டடங்கள், கடைகள் காட்சியளிக்கின்றன.

இது மெய்தியின் கடை, மெய்தியின் வீடு, மெய்தி இஸ்லாமியர் வீடு என்ற அடையாளங்கள் ஒவ்வொரு கடைகள், வீடுகளிலும் ஒட்டப்பட்டுள்ளன. நிலைமை இவ்வாறு இருக்க, தமிழ் மக்கள் அதிகம் வசிக்கும் மோரே (MOREY ) கிராமத்துக்குச் சென்று பார்த்தோம். அங்கும் பல கடைகள், கட்டடங்கள் எரிக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும் காட்சியளிக்கின்றன.

”மியான்மர் நாட்டின் எல்லைக்கருகில் அமைந்துள்ள இந்த கிராமத்தில், குக்கி மக்கள் வசிக்கிறார்கள். குறிப்பிடத்தகுந்த அளவில் தமிழ் மக்களும், நேபாள மக்களும் வாழ்கிறார்கள். இங்குள்ள அங்காளபரமேஸ்வரி கோயிலில் இப்போது விழாக்காலம் இல்லை என்றாலும், கூட்டத்தை காண இயலவில்லை. அனைத்துச் சூழல்களுக்கும் பழகி இங்கு வாழ்கிறோம்” எனக் கூறுகிறார், தலைமுறை, தலைமுறையாக அங்கு வாழும் காளியம்மாள்.

”கடந்த 3 ஆம் தேதி நான் மியான்மர் போய்விட்டு வீடு திரும்பினேன். அப்போது வீடு எரிகிறது என்றும், வீட்டைவிட்டு வெளியே வருமாறும் எல்லோரும் கத்தும் சப்தம் கேட்டது. நான் வெளியே ஓடிவந்துவிட்டேன். என் ஆதார் அட்டையைகூட எடுக்க முடியவில்லை. வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்துவிட்டன. மணிப்பூர் தமிழ்ச் சங்கம்தான் எங்களுக்கு தஞ்சம் கொடுத்திருக்கிறது. இதோ எரிந்து கிடக்கும் இந்த இடம்தான் எனது வீடு. இதுதான் எங்களின் நிலைமை” என்கிறார், மற்றொரு தமிழர்.

மணிப்பூரில் தொடரும் கலவரங்களில் 120க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர், அகதிகள் போல அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். அங்கு எப்போது அமைதி திரும்பும் என்ற கேள்வி இன்னும் விடை தெரியாமல் நிற்கிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com