“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
மணிப்பூரில் கடந்த 3ஆம் தேதி இரு சமூகத்தினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இதில், மணிப்பூர் மாநிலமே தீயில் கருகியது. 8 மாவட்டங்களில் தீ பரவியதாகச் செய்திகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து அம்மாநில அரசு உடனே இணையதள சேவையை முடக்கி, ஊரடங்கை அமல்படுத்தியது. மேலும், வன்முறையை கட்டுப்படுத்த, கலவரக்காரர்களைக் கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கலவரத்தைத் தடுக்கும் வகையில் ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு, அவர்களுடைய கட்டுப்பாட்டுக்குள் அப்பகுதிகள் கொண்டுவரப்பட்டன. மேலும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த நிலையில், ராணுவத்தினரின் உறுதியான நடவடிக்கையால் அமைதி திரும்பி வருவதாக அங்குள்ள செய்திகள் தெரிவிக்கின்றன. பாதுகாப்புக்காக ராணுவ வீரர்கள் சாலைகளில் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், சாலைகளில் வாகனங்கள் ஓடத் தொடங்குவதாகவும், கடைகள் திறந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதேநேரத்தில், இந்த வன்முறையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சுமார் 13,000 பொதுமக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், நாடு முழுவதும் நேற்று (மே 7) நீட் தேர்வு நடைபெற்றது. இதில் மணிப்பூரில் மட்டும் சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை கோரி, பழங்குடியினர் அமைப்பு சாா்பில் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘கடந்த 3-ஆம் தேதி தொடங்கிய வன்முறையில் ஏராளமான தேவாலயங்கள், மருத்துவமனைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பழங்குடியினரின் வீடுகள், வாகனங்கள், கடைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த 30 பேர் உயிரிழந்துவிட்டனா்.
132 போ் காயமடைந்துள்ளனா். இதுதொடா்பாக எந்த விசாரணையும் நடைபெறவில்லை. ஆளும் கட்சியின் ஆதரவுடன் பழங்குடியினா் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. தேவாலயங்கள் உள்பட பழங்குடியினரின் அனைத்து வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும்’ எனக் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கை, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜெ.பி.பா்திவாலா ஆகியோா் அடங்கிய அமா்வு இன்று விசாரித்தது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, உணவு, மருத்துவ வசதி கிடைக்கும் தற்காலிக முகாம்களை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியிருப்பதோடு, மணிப்பூரில் ஏற்பட்ட உயிரிழப்பும், பொருள் சேதங்களும் கவலையளிக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், மணிப்பூர் மாநிலத்தில் அமைதியைக் கொண்டு வர அரசுகள் தரப்பில் எடுக்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
மணிப்பூர் கலவரம் தொடர்பாகப் பலரும் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அக்கலவரத்தில் 54 பேர் உயிரிழந்தது தொடர்பாக பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், “மணிப்பூரில் நடந்த வன்முறையில் 54 பேர் பலியாகியுள்ளனர். ஆனால், கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி மும்முரமாக உள்ளார். மணிப்பூர் எரிகிறது. ஜம்மு காஷ்மீரில் நமது வீர வீரர்கள் இறந்துள்ளனர்.
விளையாட்டு வீரர்கள், விவசாயிகள், ஏழைகள், வேலையில்லாதவர்கள், பெண்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பிரதமரோ தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக இருக்கிறார்” எனக் கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், திருவனந்தபுரம் எம்.பியுமான சசி தரூர், “ஆட்சிக்கு வந்த ஓராண்டிலேயே பாஜகவால் மணிப்பூர் மக்கள் மொத்தமாக ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். இது மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வருவதற்கான நேரம். எந்த காரணத்துக்காக மாநில அரசினை மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்தார்களோ அது நிறைவேற்றப்படவில்லை ” எனத் தெரிவித்திருந்தார்.