மணிப்பூரில் மெய்தி, குக்கி இனத்தவரிடையே சமீப நாட்களாக மீண்டும் மோதல் அதிகரித்துள்ளது. அண்மையில் ட்ரோன்கள், ராக்கெட்டுகள் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்துள்ளனர். ட்ரோன் தாக்குதலை தடுக்க தவறிய மாநில காவல்துறை தலைவரையும் பாதுகாப்பு ஆலோசகரையும் நீக்கக் கோரி மாணவர் அமைப்பினர் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களை காவல்துறையினர் தடுக்க முற்பட்ட போது இரு தரப்புக்கும் மோதல் வெடித்தது. அப்போது போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.
மணிப்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் மத்திய உள்துறை அமைச்சரின் உருவ பொம்மையையும் எரித்தனர். சமூக வலைதளங்களில் புகைப்படங்கள், வெறுப்புப்பேச்சுகள், வெறுப்பு வீடியோக்கள் பரப்பப்படுவதால் செப்டம்பர் 15 ஆம் தேதி மாலை 3 மணி வரை இணையசேவைக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தெலங்கானா மற்றும் ஜார்கண்ட்டில் உள்ள இரண்டு சிஆர்பிஎஃப் படைகளை மணிப்பூருக்கு அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 2 ஆயிரம் வீரர்களைக் கொண்ட இந்த படையினர் சுரச்சந்த்பூர் மற்றும் இம்பாலில் குவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரோன்களை சுட்டு வீழ்த்தும் துப்பாக்கிகள், ட்ரோன், ஆளில்லா வான்வழி இயந்திரங்களை செயல்படவிடாமல் தடுக்கும் நவீன தொழில்நுட்ப கருவிகளும் மணிப்பூருக்கு அனுப்பப்பட உள்ளன.
மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் குக்கி, மெய்தி இனத்தவரிடையே நடந்த மோதல் தற்போது வரை நீடிக்கிறது. இதில் 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.