மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினா் அந்தஸ்து வழங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினா் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. கடந்த 2 மாதங்களாக அங்கு தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. வன்முறை நடைபெற்ற இடங்களில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அங்கு கலவரம் ஓய்ந்த பாடில்லை. கலவரத்தால் அங்கு பெருமளவில் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டிருக்கின்றன. மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன.
இத்தகைய பதற்றமான சூழலில், மணிப்பூரில் குகி பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் ஊர்வலமாக இழுத்துச் சென்று அவமதித்த வீடியோ ஒன்று நேற்று இணையத்தில் வெளியானது. இரண்டு பெண்களில் ஒரு இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் . மேலும் இந்தச் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் உதவ முயன்ற போது, அவரை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளனர். அவரின் தந்தையும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்.
இணையத்தில் வேகமாக பரவி வரும் வீடியோவில் காணப்படும் சம்பவம் கடந்த மே மாதம் 4ஆம் தேதி காங்போக்பி மாவட்டத்தில் நடந்ததாகவும், இக்கொடூர செயலில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்கள் மீது கடத்தல், கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து வலைவீசித் தேடி வருவதாகவும் மணிப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. மணிப்பூரில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டு இருப்பதால் இச்சம்பவம் இரண்டு மாதங்களுக்கு பிறகு தாமதமாக வெளியுலகுக்கு தெரியவந்துள்ளது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இதனால் மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இப்படி ஒரு கொடூரமான குற்றம் நடந்ததே இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அதுவும் வீடியோ வெளியான பிறகுதான் உலகிற்கு தெரிகிறது என்றால், அங்கு சட்டம் ஒழுங்கு நிலைமை எவ்வளவு மோசமடைந்திருக்கிறது என்பதை உணரலாம் என எதிர்கட்சிகள் கவலை தெரிவித்துள்ளன.
இந்நிலையில் மணிப்பூரில் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரமான வன்முறை சம்பவத்தில் மேலும் சில அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்த கொடூர சம்பவம் அரங்கேறிய இடத்தில் போலீசார் இருந்ததாகவும், ஆனால் அவர்கள் தங்களைக் காப்பாற்ற உதவவில்லை என்றும் பாதிக்கப்பட்ட இரு பெண்களில் ஒருவர் தற்போது தெரிவித்துள்ளார்.நான்கு போலீசார் காரில் அமர்ந்தபடி தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை வேடிக்கை பார்த்ததாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக 'தி வயர்' இணையதளத்துக்கு பேட்டி அளித்துள்ள அந்த பெண், ''மைதேயி சமூகத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் ஊருக்குள் புகுந்திருப்பதாக பக்கத்து வீட்டுக்காரர்கள் என்னிடம் கூறினர். இதனால் நாங்கள் (குகி பழங்குடி மக்கள்) கிராமத்தை விட்டு வெளியேற முடிவு செய்தோம். தாக்குதல் நடத்தியவர்கள் எதையும் யோசிக்கவில்லை. அவர்கள் எங்களை ஒரு புதர் நிறைந்த பகுதிக்கு அழைத்துச் சென்றனர். மூன்று பேர் என்னைப் பிடித்துக் கொண்டனர். அதில் ஒருவன் என்னை துன்புறுத்த மற்றவர்களுக்கு அழைப்பு விடுத்தான். அவர்களில் சிலர் எங்கள் ஆடைகளை கழற்றச் சொன்னார்கள். மெய்தே சமூகத்தினரில் சிலர்கூட எங்களைக் காப்பாற்ற முயன்றனர். இவை அனைத்தையும் மணிப்பூர் காவல்துறையினர் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். எங்களைக் காப்பாற்ற முன்வரவில்லை" என்று அவர் கூறினார்.
இந்த நிலையில் மணிப்பூரில் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பாக விளக்கமளித்துள்ள அம்மாநில காவல்துறை, கடந்த மே 4ஆம் தேதி அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய மர்ம நபர்களால் 2 பெண்களை நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ தொடர்பாக, நாங்போக் செக்மாய் காவல் நிலையத்தில் (தௌபல் மாவட்டம்) கடத்தல், கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை தொடங்கியுள்ளது மற்றும் குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய மாநில காவல்துறை முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் சட்ட ஒழுங்கை கருத்தில்கொண்டு இந்த வீடியோவை நீக்குமாறு ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பத்திரிக்கையாளர் வசுந்தரா வேணுகோபால் கூறுகையில், "சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு வழிவகுக்கும் இந்த வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்டு வருவதால் அந்நிறுவனம் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. வீடியோ மேற்கொண்டு பரவாமல் இருக்க தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது" என்று ட்வீட் செய்துள்ளார்.
பழங்குடியின பழங்குடித் தலைவர்கள் மன்றத்தின் (ITLF) உறுப்பினரான கிரேசி, பாதிக்கப்பட்ட இரு பெண்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவர், “அந்த வீடியோவை பார்த்து என் இதயம் கனத்துவிட்டது. பாதிக்கப்பட்ட பெண்களிடம் நடந்ததை கேட்டறிந்தேன். மனது வலிக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் சித்திரவதை செய்யப்பட்ட செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் சூழலில் பிரதமர் நரேந்திர மோடி வாயைத்திறந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லையே'' என்று அவர் கவலை தெரிவித்தார்.