சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தன்னை மாற்றக்கோரி எம்.வி.முரளிதரன் கோரிக்கை வைத்திருந்த நிலையில் கொல்கத்தாவுக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
மெய்தி சமுதாய மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கடந்த மார்ச் 27ஆம் தேதி தலைமை நீதிபதி எம்.வி.முரளிதரன் உத்தரவிட்டிருந்தார். இந்த தீர்ப்பின் காரணமாக குக்கி மக்களிடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. போராட்டங்கள் வெடித்தன. தொடர்ந்து படிப்படியாக வன்முறையாக மாறி, தற்போது வரை மணிப்பூர் மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பவில்லை.
மணிப்பூர் வன்முறைக்கு பல்வேறு காரணங்கள் இருப்பினும், மிக முக்கிய காரணமாக இந்த தீர்ப்பு கருதப்படுகிறது. இதனிடையே, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.வி.முரளிதரன் வழங்கிய தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த தீர்ப்பை மாற்றிக்கொள்ள நீதிபதி முரளிதரனுக்கு வாய்ப்பு இருந்தும்கூட, அவர் அந்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை என உச்ச நீதிமன்றம் அவரை கடுமையாக கண்டனம் செய்திருந்தது.
இந்நிலையில்தான் எம்.வி.முரளிதரன் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரை பணியிடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை அளித்திருக்கிறது. விரைவிலேயே மத்திய அரசு, இதற்கான உத்தரவுகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.