மணிப்பூரில் மைத்தேயி மற்றும் குகி பழங்குடியினத்தவர் இடையே கடந்த மே மாதம் தொடங்கி வன்முறை நிகழ்ந்து வருகிறது. இதனால் மணிப்பூரில் பதற்றமான சூழல் நிகழ்ந்து வருகிறது. இரண்டு மாதங்களுக்கும் மேலாகப் பிரச்னை நீடித்து வருகிறது. இந்தக் காலகட்டத்தில், ஏராளமான தேவாலயங்களும் கோயில்களும் எரித்து சாம்பலாக்கப்பட்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கான வீடுகளும் கடைகளையும் அடித்து நொறுக்கப்பட்டு, தீவைத்து கொளுத்தப்பட்டும் நாசமாக்கப்பட்டிருக்கின்றன. இரு தரப்பினரிடையிலான மோதல்களில் சுமார் 150 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பாதுகாப்பு கருதி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டும் மணிப்பூர் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரடியாக சென்று சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் பலனளிக்கவில்லை. இந்த கலவரத்துக்கு மத்தியில், மணிப்பூரில் குக்கி பழங்குடி இனத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி, சாலையில் ஊர்லமாக இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது
மணிப்பூர் வன்முறை பற்றி மவுனம் காத்துவந்த பிரதமர் நரேந்திர மோடி, 79 நாள்களுக்குப் பிறகு இந்த சம்பவத்துக்காகக் கவலை தெரிவித்தார். மணிப்பூரில் நீடித்து வரும் வன்முறை மற்றும் அங்கு 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக கொண்டு சென்றது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இந்த அமளியால் மழைக்கால கூட்டத்தொடர் முதல் 2 நாட்களும் முடங்கியது. ஆனால் மணிப்பூர் பிரச்சினை குறித்து விவாதிக்க தயார் எனக்கூறி வரும் மத்திய அரசு, எதிர்க் கட்சிகள்தான் விவாதிக்காமல் இடையூறு ஏற்படுத்துவதாக குற்றஞ்சாட்டி வருகிறது. இதனால் மணிப்பூர் விவகாரத்தில் இரு தரப்பும் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றன.
மூன்று மாதங்களாக மணிப்பூரில் நடந்து வரும் நிகழ்வுகள் உலக நாடுகளின் விவாதத்துக் ஆளாகி வருகின்றது. அந்த வகையில் மணிப்பூர் விவாகரம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் சிறப்பு தூதர் மணிப்பூர் வன்முறை தொடர்பான விவாதத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பினார். அந்நாட்டு எம்பி பியோனா புரூஸ் பேசுகையில், மணிப்பூர் வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்றும் திட்டமிட்டு நடக்கும் வன்முறை என்றும் கூறினார். மணிப்பூரில் நூற்றுக்கணக்கான தேவாலயங்கள் அழிக்கப்பட்டிருப்பதாக புரூஸ் கூறினார். மணிப்பூர் விவாகரம் தொடர்பாக அதிகளவில் அறிக்கைகள் வெளிவராமல் இருப்பதாகவும் இங்கிலாந்து எம்பி பியோனா புரூஸ் கவலை தெரிவித்தார்.
கடந்த வாரம், மணிப்பூர் வன்முறை குறித்து ஐரோப்பிய அவையும் விவாதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.