மணிப்பூரைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் சுங்ரெங் கோரன். தற்போது நடந்த மேட்ரிக்ஸ் பைட் நைட் (MFN) போட்டியில் அவர் பங்கேற்றார். இதில் வெற்றி பெற்ற பின்னர் பேசிய அவர், “இது எனது தாழ்மையான வேண்டுகோள். வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் வன்முறை தொடங்கி ஒரு வருடம் ஆகிவிட்டது. மக்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர். பலர் நிவாரண முகாம்களில் உள்ளனர்.
இந்த நிவாரண முகாம்களில் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. குழந்தைகளால் சரியாக படிக்க முடியவில்லை. அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, தயவுசெய்து ஒரே ஒருமுறை பிரதமர் நரேந்திர மோடி, மணிப்பூருக்கு வந்து அமைதியை மீட்டெடுக்க வேண்டும்” என்றார். அவர் கண்ணீர்மல்க வைத்த கோரிக்கை இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த ஆண்டு (2023) மே மாதம் மணிப்பூரில் இரு (மெய்டீஸ் - குக்கி) சமூகத்தினரிடையே ஏற்பட்ட வன்முறை, இன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்தக் கலவரத்தின்போது இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவம், உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. கலவரத்தில் இதுவரை 200க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருப்பதாகவும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வேறு இடங்களை நோக்கி இடம்பெயர்ந்திருப்பதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால், பிரதமர் மோடி இன்றுவரை மணிப்பூர் செல்லவில்லை. இதைவைத்துத்தான் அந்த குத்துச்சண்டை வீரர் உருக்கமான வலியுறுத்தலை வைத்துள்ளார்.
முன்னதாக அஸ்ஸாம் காங்கிரஸ் எம்.பி கௌரவ் கோகோய், ‘மணிப்பூரில் அமைதியின்மை ஏற்பட்டு 311 நாள்களைக் கடந்திருக்கிறது. ஆனால், இதே காலகட்டத்தில் பிரதமர் மோடி 13 சர்வதேச நாடுகளுக்கும், 88-க்கும் மேற்பட்ட முறை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் பயணங்களை மேற்கொண்டுள்ளார். ஆனால், மணிப்பூருக்கு அவரது வருகை ஜீரோ’ எனத் தெரிவித்துள்ளார்.