ஹரித்வார் கும்பமேளாவில் கலந்துகொண்டு திரும்பியவர்களுக்கு கொரோனா சோதனை செய்யவும், வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளவும் பல மாநிலங்கள் உத்தரவிட்டிருக்கிறது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மிகவேகமாக பரவிவரும் சூழலில், ஹரித்வாரில் நடந்த கும்பமேளாவில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டது சர்ச்சையாகி வருகிறது. இந்த கும்பமேளாவில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே கும்பமேளா ஒரு சூப்பர்ஸ்ப்ரெடர் நிகழ்வாக இருக்கக்கூடும் என்ற அச்சத்தில், உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் கும்பமேளாவில் கலந்துகொண்டு ஊர் திரும்பியவர்களுக்கு பல மாநிலங்களும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது.
கும்பமேளாவில் இருந்து திரும்பியவர்கள் மூலமாக கொரோனா பரவுவதைத் தடுக்கும் முயற்சியில், பல மாநிலங்களும் கும்பமேளாவிலிருந்து திரும்பி வருபவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் கொரோனா சோதனை மற்றும் வீட்டு தனிமைப்படுத்தலை கட்டாயமாக்கியுள்ளன.
மத்தியப் பிரதேசம், ஒடிசா, டெல்லி, குஜராத் போன்ற மாநிலங்கள் ஹரித்வாரில் கும்பமேளாவில் கலந்துகொண்டு திரும்பியவர்கள் தங்களைத்தாங்களே 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளவும், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யவும். மாவட்ட நிர்வாகம் மூலமாக இவர்களை தொடர்ந்து கண்காணிக்கவும் உத்தரவிட்டிருக்கிறது.