பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை இன்று நடைபெறுகிறது.
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக கடந்த நவம்பர் 15 ஆம் தேதி சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வார நாட்களில் 2 ஆயிரம் பக்தர்களும், வார இறுதியில் 3 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு இதே நாளில் சபரிமலையின் வருமானம் 156 கோடியாக இருந்த நிலையில், பக்தர்கள் வருகை குறைவால் தற்போது தற்போது கோயில் வருமானம் வெறும் 9 கோடியாக சரிந்துள்ளது.
பக்தர்கள் வருகை குறைவாக இருந்த போதிலும், சபரிமலையில் இன்று மண்டல பூஜை வழக்கமான முறைப்படி நடைபெறுகிறது. இதற்காக ஆரன்முளா பார்த்தசாரதி ஆலயத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட 453 கிலோ எடையுள்ள தங்க அங்கி ஐயப்பனுக்கு இன்று சார்த்தப்பட்டு நண்பகல் 11.40 மணி அளவில் மகா தீபாரதனை நடைபெறுகிறது. அதன் பின் இரவு நடை அடைக்கப்பட்டதும், மகர விளக்கு பூஜைகளுக்காக மீண்டும் வரும் 30 ஆம் தேதி நடை திறக்கப்படுகிறது. முன்னதாக கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் 43 மணி நேரத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்ட கொரோனா தொற்று சான்றிதழை கொண்டுவர வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.