மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக இன்று (16.11.22) சபரிமலை நடைதிறக்கப்பட உள்ள நிலையில், 'வெர்ச்சுவல் கியூ' மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்பட உள்ளது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஸ்ரீ தர்மசாஸ்தா க்ஷேத்ர நடை இன்று (நவம்பர் 16 ஆம் தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரின் தலைமையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோவில் கருவறையை திறந்து தீபம் ஏற்றுகிறார்.
இதையடுத்து 'வெர்ச்சுவல் கியூ' மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படுகிறது. முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்கு நிலக்கல்லில் தற்காலிக முன்பதிவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சபரிமலை புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி மற்றும் மாளிகபுரம் மேல்சாந்தி ஹரிஹரன் நம்பூதிரி ஆகியோருக்கு அபிஷேகம் மற்றும் பதவியேற்பு விழாவும் இன்று (நவம்பர் 16 ஆம் தேதி) மாலை நடைபெற உள்ளது.
டிசம்பர் 27 ஆம் தேதி மண்டல பூஜையும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடக்கும். ஜனவரி 20 ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காலம் நிறைவடைந்து நடை அடைக்கப்படும். சபரிமலையில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 13,000 போலீசார் ஆறு கட்டங்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பக்தர்களுக்கு தேவையான உணவு, மருத்துவம், சுகாதாரம் போக்குவரத்து, தங்கும் வசதிகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு சார்பில் செய்யப்பட்டுள்ளது.