(கோப்புப் படம்)
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தாயின் உடலுக்கு இறுதிச்சடங்குகளை செய்ய மகன் அனுமதிக்கப்படாமல், உடலையும் பொக்லைன் எந்திரம் மூலம் மயானத்திற்கு எடுத்துச்செல்ல நிர்ப்பந்திக்கப்பட்ட துயரச் சம்பவம் தெலங்கானாவில் அரங்கேறியுள்ளது. இதுபற்றிய செய்தியை தி நியூஸ் மினிட் இணையதளம் வெளியிட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம், நிஜமாபாத் மாவட்டம் அர்மூர் மண்டல் கிராமத்தைச் சேர்ந்த 55 வயது பெண்மணி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தொற்று இருப்பதாகக் கூறப்பட்டதால், தாயின் இறுதிச்சடங்குகளை மகன் நடத்த, பீதியடைந்த கிராம மக்கள் அனுமதிக்கவில்லை.
உயிரிழந்த பெண்ணின் இரு மகள்கள் மற்றும் வயதான கணவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை. தொற்று காரணமாக ஐந்து நாட்களாக தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டிருந்தார் மகன். இறுதிச்சடங்கு செய்வதற்கு யாருமே முன்வராத நிலையில், தாயின் உடலை தனியாக பொக்லைன் எந்திரம் மூலம் மயானத்திற்கு எடுத்துச்செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
பின்னர் நிஜாமாபாத் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், கிராம மக்களால் புறக்கணிக்கப்பட்ட பெண்ணின் இறுதிச்சடங்கு உரிய முறையில் நடத்தப்பட்டது. அதில், அதிகாரிகள் முன்னிலையில் நோய்த்தடுப்பு உடைகளுடன் குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேரும் கலந்துகொண்டுள்ளனர்.