பிரதமர் மோடி பங்கேற்ற மேன் Vs வைல்ட் நிகழ்ச்சி உலகின் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்வாக சாதனை படைத்துள்ளதாக அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் தெரிவித்துள்ளார்.
டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற நிகழ்ச்சி ‘மேன் Vs வைல்ட்’. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் மூலம் உலகம் முழுவதும் அறியப்படுபவர் பியர் கிரில்ஸ். காடு, வன உயிரினங்களின் தன்மையை விளக்கும் பியர் கிரில்ஸ் காட்டுக்குள் சிக்கினால் உயிர் பிழைப்பது எப்படி என்பது குறித்து நிகழ்ச்சி மூலம் விளக்கம் அளிப்பார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பியர் கிரில்ஸ் உடன் காடுகளில் பயணம் செய்தார்.
அந்த நிகழ்ச்சி பல மொழிகளில் டப் செய்யப்பட்டு கடந்த 12ம் தேதி ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிரதமர் மோடி தன்னுடைய கடந்த காலம் குறித்து பகிர்ந்து கொண்டார். விலங்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் குறித்த விழிப்புணர்வுக்காக பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக பியர் கிரில்ஸ் தெரிவித்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடி பங்கேற்ற மேன் Vs வைல்ட் நிகழ்ச்சி உலக அளவில் அதிக ட்ரெண்டான தொலைக்காட்சி நிகழ்ச்சியாக சாதனை படைத்துள்ளதாக பியர் கிரில்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பதிவிட்டுள்ள அவர், உலகின் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்வாக பிரதமர் மோடி பங்கேற்ற மேன் Vs வைல்ட் நிகழ்ச்சி சாதனை படைத்துள்ளது. இது ட்விட்டரில் 3.6 பில்லியன் பதிவுகளை கொண்டு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.
முந்தைய சாதனையான சூப்பர் பவுல் 53 நிகழ்ச்சியின் சாதனையை இது முறியடித்துள்ளது. அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.