ஆபத்திலிருக்கும் ஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்றுவதற்காக 400 கி.மீ பயணம் செய்து அரிதான இரத்தத்தை தானமாக கொடுத்த நபர்.
கிடைப்பதற்கு அரியவகையான இரத்தம் பெறுவது என்பது கடினமான ஒரு செயல்தான் என்றாலும், நல்ல உள்ளங்கள் கொண்ட சிலர், இரத்ததான குழுக்களில் தங்களை இணைத்துக்கொண்டு, தேவைப்படும் நபர்களுக்கு இரத்தங்களை தானமாக கொடுத்து வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடியை சேர்ந்த ரவீந்திர அஷ்டேகர். இவர் அப்பகுதியில் மொத்த பூ வியாபாரம் செய்து வருகிறார். சமூக சேவை செய்யும் நோக்குடன் இவர் மும்பை ரத்தக்குழுவில் தன்னை இணைத்துக்கொண்டு, தேவைப்படுபவர்களுக்கு அவ்வப்போது இரத்ததானமும் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், மத்தியபிரதேசம் இந்தூரை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு அறுவைசிகிச்சை செய்ய அரியவகை O+ வகை இரத்தம் தேவைப்படுவதாக வாட்ஸ்அப் குழுக்களில் அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த அறிவிப்பானது மும்பை ரத்தக்குழுவில் இருந்த ரவீந்திர அஷ்டேகர் கண்ணில் பட்டவுடன், அப்பெண்ணிற்கு இரத்த தானம் செய்வதற்காக ஷீரடியிலிருந்து 400 கிலோமீட்டற்கு மேல் பயணித்து இந்தூரை அடைந்துள்ளார். அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு தன்னுடைய அரிய வகை இரத்தத்தை தானம் செய்துள்ளார். இதனால் அப்பெண் அபாயக் கட்டத்தைத் தாண்டி உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், “வாட்ஸ்அப்பில் இரத்த தானம் செய்பவர்களின் குழு மூலம் இந்த பெண்ணின் நிலை குறித்து எனக்கு தெரிந்ததும், நான் ஒரு நண்பரின் காரில் சுமார் 440 கிலோமீட்டர் பயணம் செய்து இந்தூருக்கு வந்தேன். பிறகு மருத்துவமணை சென்று அப்பெண்ணிற்கு இரத்ததானம் செய்தேன். ஆபத்துநிலையில் இருந்த அப்பெண்ணின் உயிரைக்காப்பாற்ற என்னால் ஆன உதவியைச் செய்தேன்" என்று அஷ்டேகர் கூறியிருக்கிறார்.
இவர் கடந்த 10 ஆண்டுகளில், தனது சொந்த மாநிலமான மகாராஷ்டிராவிலும், குஜராத், உத்தரபிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு நகரங்களிலும் 8 முறை ஏழை நோயாளிகளுக்கு ரத்த தானம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.