ரயிலில் பயணி ஒருவர் குழந்தையை வைத்துக்கொண்டு இருட்டில் சிரமப்படுவதை பார்த்த டிக்கெட் பரிசோதகர், அவரை வெளிச்சம் உள்ள வேறொரு இருக்கைக்கு மாற்றினார்.
சமீபத்தில் விசாக் கிருஷ்ணா என்பவர் தனது ஒரு வயது குழந்தையுடன் கேரளா மாநிலம் கண்ணூர் செல்லும் ரயிலில் பயணம் செய்துள்ளார். அவர் இருந்த பி1 கோச் பெட்டியில் போதுமான அளவு வெளிச்சம் இல்லாத இருக்கை அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால் இருட்டறையில் இருந்ததுபோல் இரவில் குழந்தையை வைத்துக்கொண்டு கிருஷ்ணா சிரமத்துடன் பயணம் செய்து வந்துள்ளார். அச்சமயத்தில் அந்த கோச்சுக்கு வந்த டிக்கெட் பரிசோதகர், குழந்தையை வைத்துக்கொண்டு அந்த பயணி இருட்டில் சிரமப்படுவதை பார்த்து, கிருஷ்ணாவை வெளிச்சம் உள்ள வேறொரு இருக்கைக்கு மாற்றினார். அதன்பிறகே கிருஷ்ணா நிம்மதி பெருமூச்சு விட்டு குழந்தையுடன் தூங்கினார்.
அந்நேரத்தில் டிக்கெட் பரிசோதகர் நினைத்திருந்தால் கண்டும் காணாததுபோல் சென்றிருக்கலாம். ஆனால் குழந்தையுடன் பயணி ஒருவர் இருட்டில் கஷ்டப்படுவதைப் பார்த்து உதவிவிட்டு சென்றது விசாக் கிருஷ்ணாவுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து ரயிலில் தனக்கு சீட் மாற்றப்படுவதற்கு முன்பு எடுத்த புகைப்படத்தையும், மாற்றியப்பின் எடுத்த புகைப்படத்தையும் ட்விட்டரில் பதிவிட்டு, அந்த டிக்கெட் பரிசோதகரின் சேவைக்கு கிருஷ்ணா நன்றி தெரிவித்தார். ரயில்வே அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஐடியை டேக் செய்து அந்த பதிவினை வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து கிருஷ்ணாவின் ட்விட்டுக்கு பதிலளித்த ரயில்வே அமைச்சகம், ''உங்களுக்கும் குழந்தைக்கும் இந்த பயணம் சவுகரியமானதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம். உங்களுக்காக சேவை செய்ய நாங்கள் இருக்கிறோம்'' எனக் கூறியது. டிக்கெட் பரிசோதகரின் இந்த அக்கறைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: மார்க் ஜுக்கர்பெர்க்கின் முகச்சாயலில் குழந்தை இயேசு சிலை-பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!