டோமினோஸ் பிஸா நிறுவனத்தின் டெலிவரி பைக்கை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் பெங்களூருவில் நிகழ்ந்துள்ளது.
பெங்களூரின் தொட்டனெகுந்தி பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகம் ஒன்றின் தரைத் தளத்தில் டோமினோஸ் பிஸாவின் கிளை ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் பிஸா நிறுவனத்தின் டெலிவரி பைக்குகளில் ஒன்று பழுதடைந்துள்ளது. இதனால் பைக்கை வந்து சரிசெய்யுமாறு மெக்கானிக்கிற்கு பிஸா நிறுவன மேலாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் மெக்கானிக் பார்ப்பதற்கு வசதியாக மற்ற டெலிவரி பைக்குகள் நிற்கும் இடத்தில் பழுதான பைக்கை சாவியுடன் நிறுத்தியுள்ளனர்.
இந்த நேரத்தில் மர்ம நபர் ஒருவர் வணிக வளாகத்திற்கு நுழைந்துள்ளார். அவர் சாவியுடன் நிற்கும் டெலிவரி பைக்கைப் பார்த்துள்ளார். உடனே அந்த பைக்கை ஸ்டார்ட் செய்தததும், அங்கிருந்த ஹெல்மெட்டை அணிந்துகொண்டார். பின்னர் அருகே இருந்த பைக்கில் பார்சல் செய்து வைக்கப்பட்டிருந்த பிஸா ஒன்றையும் எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். பிஸாவுடன் வெளியே சென்ற நபரை கவனித்த வணிக வளாகத்தின் காவலர்கள், பிஸா டெலிவரி செய்யும் நபர்தான் என்று நினைத்து தடுக்காமல் விட்டுள்ளனர். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. பைக்கை திருடிச் சென்ற நபர் சிசிடிவி கேமராக்கள் இருப்பதை அறிந்தும் திருடிச் சென்றிருக்கிறார்.