உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் ஆன்லைன் ஷாப்பிங் மூலம் மொபைல் ஃபோனுக்கு பணம் செலுத்தியிருந்த நிலையில், அவருக்கு செங்கல் பார்சலாக வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சுதீர் குமார் என்பவர், ஃபிளிப்கார்ட் என்ற ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தில் ரெட்மீ நோட் 4 ஸ்மார்ட்ஃபோன் ஆர்டர் செய்திருக்கிறார். ஆனால், தனக்கு வந்த பார்சலை பிரித்து பார்த்த போது அதில் செல்போனுக்கு பதிலாக செங்கல் இருந்தது. செங்கலைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சுதீர் உடனே வாடிக்கையாளர் உதவி எண்ணில் அழைத்து புகார் தெரிவித்திருக்கிறார். அதற்கு அந்நிறுவனம் சார்பில் பதிலளித்தவர் 12 நாட்களில் இதுபற்றி விசாரித்து அடுத்த நடவடிக்கை பற்றி தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். ஆனால், மொபைலுக்கு செலுத்திய பணம் திரும்ப கிடைக்கவில்லை என சுதீர் கவலையுடன் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று கடந்த சில மாதங்களுக்கு முன் ஸ்நேப்டீல் என்ற ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தில் மொபைல் வாங்குவதற்காக பணம் செலுத்தி செங்கல் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் ஷாப்பிங் மூலம் பொருட்கள் வாங்குவோர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தால் மட்டுமே ஏமாறுவதில் இருந்து தப்பிக்க முடியும் என்கின்றனர் தொழில்நுட்ப வல்லுனர்கள். ஆன்லைன் ஷாப்பிங் மோசடிகளை தடுக்க சைபர் கிரைம் போலீசார் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.