தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை அறிந்த உடல்நலமில்லாத ஒருவர், பெரும் விபத்தை தவிர்க்க 3 கி.மீ ஓடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம், கொரங்கிரபாடியை சேர்ந்தவர் கிருஷ்ணா பூஜாரி. வயது 53. கடந்த 3 மாதங்களாக இவருக்கு உடல் நலமில்லை. இதையடுத்து டாக்டர்கள், தினமும் வாக்கிங் சென்றால் சரியாகும் என்று கூறியுள்ளனர். இதையடுத்து அங்குள்ள ரயில்வே டிராக் அருகே அவர் வாக்கிங் செல்வது வழக்கம். கடந்த சனிக்கிழமையும் அப்படித்தான் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது தண்டவாளத் தில் விரிசல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இந்தப் பகுதியில் இப்போது ரயில்கள் வரும் நேரமாச்சே என்று நினைத்தார். இதில் ரயில் வந்தால் விபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதாக நினைத்த அவர் தனது உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல் அருகில் உள்ள உடுப்பி ரயில்வே ஸ்டேஷனுக்கு தகவல் சொல்ல ஓடினார்.
சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அந்த ஸ்டேஷனுக்கு ஓடி சென்று தகவலைச் சொன்னார். இதையடுத்து உடனடியாக செயல்பட்ட ரயில்வே அதிகாரி கள், அடுத்து வர இருந்த ரயில்களை முந்தைய ஸ்டேஷன்களிலேயே நிறுத்துமாறு கூறினார். சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே ஊழியர்கள், விரிசலை சரி செய்த பின் ரயில்கள் இயக்கப்பட்டன.
இதுபற்றி அந்த ஸ்டேஷனின் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘சரியான நேரத்துக்கு பூஜாரி வந்து சொன்னார். அவரால் பெரும் விபத்து தவிர்க்கப் பட்டிருக்கிறது. ஏனென்றால் இரண்டு பக்கம் இருந்தும் ரயில்கள் வருவதற்கு தயாராக இருந்தன’ என்றார். இதையடுத்து கிருஷ்ணாவை, அதிகாரிகள் பாராட்டினர்.