தன் காதலிக்கு மெசேஜ் செய்த நண்பனின் தலை, பிறப்புறுப்பை வெட்டிய காதலன்.. ஐதராபாத்தில் பகீர்
தன் முன்னாள் காதலிக்கு மெசேஜ் அனுப்பி சாட்டிங் செய்ததாக தன்னுடைய நண்பனையே கொன்று உடலை சிதைத்தவரை ஐதராபாத் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்திருக்கிறார்கள்.
இந்த கொலைக்குற்றம் குறித்து பேசியுள்ள ரச்சாகொண்ட காவல்துறை ஆணையர் டி.எஸ்.செளகான், கைது செய்யப்பட்டவர், இறந்த நபரின் தலையை இரண்டாக துண்டித்து, அவரது இதயம், பிறப்புறுப்பு மற்றும் குடல்களை அகற்றி, அவரது விரல்களை வெட்டி எஞ்சிய உடலை அப்துல்லாபூர்மேட்டில் உள்ள மலைப்பகுதியில் வீசி, சிதைத்த நண்பரின் உடலை ஃபோட்டோ எடுத்து தனது காதலிக்கும் அனுப்பியிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
நல்கொண்டா மாவட்டத்தின் நர்கெட்பள்ளி பகுதியை சேர்ந்தவர்கள் இறந்த நெனவத் நவீன் (21) மற்றும் கைதான ஹரி ஹர கிருஷ்ணா. இருவரும் ஒரு வகுப்பில் பயின்றவர்கள். நவீனின் முன்னாள் காதலியும் ஹரி ஹர கிருஷ்ணனும் தற்போது காதலித்து வந்திருக்கிறார்கள் என சொல்லப்படுகிறது. தனது காதலியுடன், அவரது முன்னாள் காதலன் நவீன் இப்போதும் பழகி வருவதை ஹரி ஹர கிருஷ்ணா எதிர்த்திருக்கிறார். இந்த நிலையில்தான் கொலை சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
இது குறித்து போலீஸ் தரப்பில் துணை காவல் ஆணையர் சாய் ஸ்ரீ கூறுகையில், “கடந்த பிப்ரவரி 17ம் தேதி அப்துல்லாபூர்மேட்டில் உள்ள ஒரு இடத்துக்கு சாதரணமாக நவீனை கிருஷ்ணா அழைத்திருக்கிறார். அங்கு சென்றபின், போதையில் இருந்த போது இருவருக்குள்ளும் கைகலப்பு ஏற்பட்டிருக்கிறது.
இதனையடுத்து நான்கு நாட்கள் ஆகியும் நவீன் கல்லூரிக்கும் செல்லாமல், வீட்டுக்கும் வராமல் இருந்ததால் சந்தேகமடைந்த நவீனின் தந்தை ஷங்கரைய்யா நர்கெட்பள்ளி காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரி 22ம் தேதி புகார் தெரிவித்திருக்கிறார்” என்றுள்ளார்.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையின் போதுதான் அப்துல்லபூர்மேட்டில் உள்ள மலைப்பகுதியில் நேற்று (பிப்.,25) நவீனின் சிதைந்த உடல் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. மொபைல் சிக்னலை கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்தான் கிருஷ்ணாவின் மீது காவல்துறைக்கு சந்தேகம் திரும்பியிருக்கிறது.
அதன்படி இருவரது சிக்னலும் கடைசியாக அப்துல்லாபூர்மேட்டில் ஒன்றாக இருந்ததை வைத்து விசாரித்ததையடுத்து, தலைமறைவாக இருந்த கிருஷ்ணாவை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது. போலீஸ் தேடுவதை அறிந்த கிருஷ்ணா கடந்த வெள்ளியன்று இரவு சரணடைந்ததார். பின் சனிக்கிழமை முறையாக கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அதன் பிறகு விசாரித்ததில், பிப்ரவரி 17ம் தேதி நவீனை கொன்று அவரது உடலை சிதைத்து அப்புறப்படுத்தியதும், அதனை ஃபோட்டோவாக எடுத்து காதலியின் வாட்ஸ் அப் எண்ணுக்கு கிருஷ்ணா அனுப்பியதும் தெரியவந்ததாக காவல் ஆணையர் செளகான் கூறியிருக்கிறார்.
இதுபற்றி காவல்துறை தரப்பில், “இந்த விவகாரம் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்டவருக்கு நிச்சயம் கடும் தண்டனை கொடுக்கப்படும். மீட்கப்பட்ட நவீனின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஹயத்நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது” எனக்கூறப்பட்டுள்ளது.
இதனிடையே நவீன் மற்றும் கிருஷ்ணா உடனான உறவு குறித்து பேசியிருக்கிறார் காவலர் சாய் ஸ்ரீ. அதில் “நவீன், கிருஷ்ணா இருவரும் 12ம் வகுப்பில் தில்ஷுக் நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாக படித்திருக்கிறார். பின்னர் ஐதராபாத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரில் கிருஷ்ணா படிக்க, நல்கொண்டாவில் உள்ள மகாத்மா பல்கலைக்கழகத்தில் நவீன் பி.டெக் படித்திருக்கிறார்.
அந்த சமயத்தில்தான் நவீனும் சம்பந்தப்பட்ட பெண்ணும் காதலர்களாக பழகி வந்திருக்கிறார்கள். ஆனால் இரண்டு ஆண்டுகள் கழித்து நவீனுடனான உறவில் இருந்து விலகிய அப்பெண், சிறிது நாட்கள் கழித்து கிருஷ்ணாவுடன் பழகி வந்திருக்கிறார். அந்த சமயத்தில்தான் நவீன் மீண்டும் அப்பெண்ணுடன் பேச ஆரம்பித்ததால் கிருஷ்ணா அதிருப்தி அடைந்திருக்கிறார்” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.