கரைபுரண்டோடும் வெள்ள நீரில் குதித்து ‘டிக்டாக்’ எடுக்க முயற்சித்து தண்ணீருக்குள் மூழ்கியவரை கிராம மக்கள் காப்பாற்றினர்.
இளைஞர்களை அதிகம் கவர்ந்த சமூக வலைத்தளங்களில் ஒன்றாக ‘டிக்டாக்’ செயலி இருந்து வருகிறது. இந்தச் செயலியில் இளைஞர்கள் மகிழ்ச்சியாக பாட்டு பாடி, நடனம் ஆடி தங்களின் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். பொழுதுபோக்கு எனக்கூறிகொண்டு டிக் டாக் வீடியோவிற்காக அபாயகரமான இடங்களில் நின்று வீடியோ எடுப்பதால் பலர் உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் ஒருவர் கரைபுரண்டோடும் வெள்ள நீரில் குதித்து ‘டிக்டாக்’ எடுக்க முயற்சித்து தண்ணீருக்குள் மூழ்கினார். அருகில் இருந்த மக்களின் நீண்ட நேரம் போராட்டத்துக்குப் பின் அவர் உயிருடன் மீட்கப்பட்டார்.
35 வயதான பப்பு சிங் நீமச் மாவட்டத்தைச் சேர்ந்தவர். பெய்து வரும் கனமழை காரணமாக மத்தியபிரதேசத்தின் பல பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனைக் கண்ட பப்பு, வெள்ளத்தில் குதித்து ‘டிக்டாக்’ எடுக்க முயற்சி செய்துள்ளார். தன் நண்பர்களிடம் செல்போனை கொடுத்துவிட்டு தண்ணீருக்குள் குதித்துள்ளார் பப்பு. நீரில் வேகத்தால் நிலைகுலைந்த பப்பு, நீருக்குள் மூழ்க தொடங்கினார். இதனைக் கண்ட அவரது நண்பர்களும், கிராம மக்களும் நீண்ட போராட்டத்துக்கு பிறகு பப்புவை மீட்டனர். உடனடியாக பப்பு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவத்தை அடுத்து வெள்ள நீரில் செல்ஃபி எடுத்தல், ‘டிக்டாக்’ வீடியோ போன்ற செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது என அம்மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.