டெல்லியைச் சேர்ந்த 40 வயது நபர் ராஜேஷ் கபூர். இவர் டெல்லி, அமிர்தசரஸ், ஹைதராபாத் என பல்வேறு முக்கிய விமான நிலையங்களுக்கு சென்று வெளிநாடுகளுக்கு செல்வதற்காக இணைப்பு விமானங்களில் பயணிக்கும் பயணிகளிடம் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். வயதானவர்கள், பெண்கள் மற்றும் வயதான பெண்களைக் குறிவைத்து அவர்களை வெகுநேரம் நோட்டமிடும் இவர், அவர்களுக்குப் பின் அமருமாறு தனது இருக்கையை மாற்றிக்கொண்டுள்ளார்.
அத்தோடு தனது திட்டங்களை செயல்படுத்த பல்வேறு யுக்திகளையும் மேற்கொண்டுள்ளார் கபூர். பயணிகளின் பைகளில் இருக்கும் பொருட்களை பற்றி அறிய அவர்களை boarding gateஐ தீவிரமாக கண்காணிக்கும் ராஜேஷ் கபூர், சமயங்களில் அவர்களது baggage declaration slipsகளையும் வாசித்து தனது இலக்குகளின் உடைமைகளைப் பற்றித் தெரிந்துகொண்டுள்ளார்.
குறிப்பிட்ட பயணியின் இருக்கைக்கு அருகில் அமர்ந்ததும், மேலே வைக்கப்பட்ட தனது பைகளை மீண்டும் சரிசெய்வது போல் செய்து அவர்களது பொருட்களை திருடுவதையும், பயணிகளின் கைப்பைகளில் இருந்தும் பொருட்களை திருடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். இதில் போர்டிங்கின் போது ஏற்படும் குழப்பங்களில் திருடும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி ஹைதராபாத்தில் இருந்து டெல்லிக்கு பயணித்த பெண், தனது பையில் வைத்திருந்த 7 லட்சம் மதிப்புள்ள நகைகளைக் காணவில்லை என காவல்துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இதேபோன்று பிப்ரவரி 2 ஆம் தேதி டெல்லியில் இருந்து அமிர்தசரஸ் சென்ற பயணி ஒருவரும் தனது நகைகளைக் காணவில்லை என புகாரளித்திருந்துள்ளார்.
அப்போது முன்னரே இதேபோன்ற பல்வேறு புகார்கள் வந்திருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் டெல்லி, ஹைதராபாத், அமிர்தசரஸ் உள்ளிட்ட விமான நிலையங்களின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது இரு சம்பவங்களின் போதும் சிசிடிவி காட்சிகளின்போதும் சந்தேகத்திற்கு இடமான நபர் (ராஜேஷ்) அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேகத்தின் பேரில் ராஜேஷிடம் விசாரணை செய்ய முயற்சித்த போது, போலியான தொடர்பு எண் கொடுத்தது தெரியவந்துள்ளது. உடனே அவரது உண்மையான தொடர்பு எண்ணைக் கண்டறிந்த காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு ராஜேஷ் கபூரைப் பிடித்துள்ளனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. அவர் டெல்லியில் தனியாக கெஸ்ட் ஹவுஸ் வைத்திருந்ததும், பணப்பரிவர்த்தனை தொழிலுடன், செல்போன் பழுதுபார்க்கும் தொழிலிலும் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாது கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் ரயில்களின் ஏசி பெட்டிகளில் திருடிக் கொண்டிருந்த காரணத்திற்காக போலீசார் கைது செய்ததையடுத்து சில காலம் திருட்டு சம்பவங்களில் ஈடுபடாமல் இருந்துள்ளார். ஆனால் கடந்த சில மாதங்களாக மீண்டும் திருட்டில் இறங்கியுள்ளார். ஆனால் இச்சமயம் விமான நிலையங்களைக் குறிவைத்து திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவர் கடந்த 100 நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 200 விமானங்களில் பயணித்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக ஒரே நாளில் மட்டும் கிட்டத்தட்ட 3 முதல் 4 விமானங்களில் பயணம் செய்துள்ளார். டெல்லியில் வைத்து அவரைக் கைது செய்த காவல்துறையினர், அவரது வீட்டில் இருந்து ஏராளமான நகைகளையும் மீட்டுள்ளனர். கபூர் ஹைதராபாத்தில் மட்டுமல்லாது மேலும் ஐந்து திருட்டு வழக்குகளில் ஈடுபட்டதாக தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது தான் திருடிய பணத்தை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சூதாட்டத்திற்காக பயன்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக காவல்துறை துணை ஆணையர், உஷா ரங்னானி கூறுகையில்,” கபூரை பஹர்கஞ்சில் வைத்துக் கைது செய்துள்ளனர். தான் திருடிய நகைகளையும் அவர் அங்குதான் வைத்திருந்தார். அந்த நகைகளை ஜெயின் என்பவருக்கு விற்க திட்டமிருந்தார். நாங்கள் அவரையும் கரோல் பாக்கில் வைத்துக் கைது செய்துள்ளோம்,” எனத் தெரிவித்தார்.
மேலும் கபூர் தனது இறந்த சகோதரரின் அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி டிக்கெட்களை முன்பதிவு செய்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.