கர்நாடக மாநிலம் பாகல்கோட் அருகே உள்ள தாலுகாபகவதி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கனகவுடா பாட்டீல் (50). இவருக்கு மனைவி மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். இவர் தனியார் பேருந்து ஓட்டுநராக உள்ளார். அதேபகுதியில் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் பிரவீன் (28) என்பவர் வசித்துவந்துள்ளார். இவர் பகவதி கிராமத்தில் உள்ள தன் பெரியம்மா வீட்டில் தங்கி, தேநீர் கடை நடத்தி வருகிறார்.
சங்கனகவுடா பாட்டீலின் பெரிய மகளை, பிரவீன் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். அப்பெண்ணை பின்தொடர்ந்து சென்று தொந்தரவும் செய்துள்ளார். ஒருகட்டத்தில் பிரவீன் தொந்தரவு தாங்க முடியாமல், அப்பெண் தன் தந்தையிடம் இதுபற்றி கூறியுள்ளார்.
இதனையடுத்து சங்கனகவுடா பிரவீனிடம் “என் மகளை நீ சந்திக்க கூடாது” என எச்சரிக்கை விடுத்துள்ளார். சில நாட்கள் அமைதியாக இருந்த பிரவீன் மீண்டும், மாணவியை பின்தொடர்ந்து சென்று கிண்டல் செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சங்கனகவுடா பாட்டீல், பிரவீனை அடித்து விரட்டியுள்ளார்.
இந்த நிலையில் பிரவீன் நடத்தி வரும் தேநீர்க் கடையைக் காலையில் திறக்கும் போது கடை முன்பு ஒரு எலுமிச்சை பழம் கிடந்துள்ளது. இதைப் பார்த்த பிரவீன், சங்கனகவுடாதான் செய்வினை செய்து தன் கடை முன்பு எலுமிச்சை பழத்தை வைத்துச் சென்றுள்ளார் என நினைத்துள்ளார்.
இதனால் ஆத்திரப்பட்ட அவர் இளநீர் வெட்டும் அரிவாளை எடுத்துக் கொண்டு, கிராமத்தின் மையப் பகுதியில் உள்ள மரத்தடியில் உறங்கிக் கொண்டிருந்த சங்கனகவுடாவை பட்டப்பகலில் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். அந்த மாணவியைப் பார்த்து, "உன்னையும் இதேபோல் கொலை செய்வேன்" எனக் கூறிவிட்டு பாகல்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் செல்போனில் பேசியபடி நின்று கொண்டிருந்தார்.
இச்சம்பவம் குறித்து, தகவலறிந்து வந்த போலீசார், சங்கனகவுடாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது கொலை செய்யப்பட்ட இடத்தில் பிரவீன் எழுதிய நோட் ஒன்று கிடந்துள்ளது. அந்த நோட்டில்,
"நீ இல்லாத நான், தண்ணீர் இல்லாத மீன் போல.. உயிர் வாழமாட்டேன்! மறக்காதே! என் காவிரி நீ... உன் மடியில் படுப்பேன் நான்" என பொருள்படும் வகையில் கன்னடத்தில் கவிதை இருந்துள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் பிரவீனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.