கொரோனா விதிமுறைகளை பின்பற்ற சொன்னதற்காக இருவர் மீது சில இளைஞர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஹரியானா மாநிலம், குருகிராம் மாவட்டம் நியூ காலனி பகுதியை சேர்ந்தவர் தர்மேந்திர தாஸ். இவரது மகன் குஷ், இவர்கள் இருவரும் வீட்டின் அருகே உள்ள பேக்கரிக்கு சென்றுள்ளனர். அப்போது சில இளைஞர்கள் மாஸ்க் அணியாமல் ஒன்றாக கூடி பேசிக்கொண்டிருந்துள்ளனர்.
அப்போது தர்மேந்திர தாஸ் அவர்களை மாஸ்க் அணிய சொன்னதற்காக வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரையும் அவரது மகனையும் தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து தர்மேந்திர தாஸ் காவல்நிலையத்தில் அளித்த புகாரில், “அவர்கள் மாஸ்க் அணியாமல் இருந்தனர். அவர்களை மாஸ்க் அணிய சொன்னோம். ஆனால் அவர்கள் எங்களை துஷ்பிரயோகம் செய்தனர். மேலும் சிலரை அழைத்து குச்சிகளை கொண்டு எங்கள் மீது தாக்குதல் நடத்தினர். சிறிது நேரம் கழித்து, அந்த இடத்திற்கு அருகில் இருந்த சிலர் தலையிட்டு எங்களை காப்பாற்றினர்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் தர்மேந்திராவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவரது மகன் குஷ்சிற்கு மூக்கு, காது, தலை ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அதற்குள் தாக்குதல் நடத்தியவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருர்ந்த மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவர்கள் அளித்த புகாரின் பேரில் ஐபிசி 147, 149, 323, 506 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றம்சாட்டப்பட்டவர்களை தேடி வருகின்றனர்.