கடந்த 66 ஆண்டுகளாக தனது இடது கை நகத்தை வெட்டாமல் கின்னஸ் சாதனை படைத்த இந்தியர் தற்போது அதனை வெட்டியுள்ளார். அதேசமயம் நகத்தை வெட்டாத காரணத்தில் அவரின் இடதுகை தற்போது நிரந்தரமாக செயலிழக்கும் நிலைக்கு உள்ளாகியுள்ளது.
வாரத்திற்கு ஒருமுறையோ இல்லையென்றால் 10 நாட்களுக்கு ஒருமுறையோ நாம் நகத்தை வெட்டி விடுவோம். சிலர் மட்டும் நகத்தை அழகுப்படுத்த கொஞ்சம் அதிகமாக வளர்ப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு கூட நகம் கொஞ்ச தூரம் வளர்ந்த பின்னர் அதுவாக முறிந்துவிடும். இல்லையென்றால் ஓரளவு வளர்ச்சிக்கு பின் அவர்களே நகத்தை வெட்டிவிடுவார்கள். ஆனால் மகாராஷ்டிராவை சேர்ந்த ஸ்ரீதர் சில்லால் என்பவர் கடந்த 66 ஆண்டுகளாக தனது இடது கை நகத்தை வெட்டாமல் வளர்த்து கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளார். தற்போது ஸ்ரீதருக்கு 82 வயது ஆகிகிறது. கடந்த 1952-ஆம் ஆண்டு முதல் தனது இடது கை நகத்தை வெட்ட வேண்டாம் என முடிவு செய்து அதன்படி 66 ஆண்டுகளாக நகத்தை வளர்த்து வந்துள்ளார். உலகிலேயே கைகளில் அதிகமான நீளத்திற்கு நகத்தை வளர்த்தவர் என்ற கின்னஸ் சாதனையும் கடந்த 2016-ஆம் ஆண்டு அவர் நிகழ்த்தியுள்ளார். ஆனால் வலது கை நகத்தை மட்டும் வளர்க்காமல் வெட்டிவிட்டார்.
தற்போது இடது கை நகமானது சுமார் 31 அடி வளர்ந்துள்ளது. இது மூன்று அடுக்கு மாடி உயரம் கொண்டதாகும். தொடர்ச்சியாக நகத்தை வெட்டாமல் இருந்ததால் அவரது கையை மடக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அத்தோடு மட்டுமில்லாமல் கை நிரந்தரமாக செயலற்ற நிலைக்கு செல்லும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது.
அமெரிக்காவின் ‘ரிப்லி’ஸ் பிலிவ் இட் ஆர் நாட், அதிசயமான செயல்புரிந்தவர்கள், விநோதமானவர்கள், சாதனை புரிந்தவர்களை பேட்டி கண்டு ஒளிபரப்புகிறது. இதில் பலரது கேமராக்கள் முன்னிலையில் தான் 66 ஆண்டுகளாக வளர்த்து வந்த நகத்தை ஸ்ரீதர் வெட்டியுள்ளார். இந்த நகம் அமெரிக்காவின் மியூசியத்திலும் வைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் அவரின் இடதுகை இன்னும் செயலற்ற நிலையிலேயே இருக்கிறது.
ஸ்ரீதருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இதுமட்டுமில்லாமல் பேரக்குழந்தைகளும் ஸ்ரீதருக்கு உண்டு. இதனிடையே “நகம் வளர்ப்பது அவ்வளவு எளிதல்ல. இதனை வைத்துக் கொண்டு தூங்க முடியாது. பல காரியங்கள் செய்ய முடியாது. பல சிரமங்கள் இருக்கின்றன. ஆனால் நான் சவாலாக நகத்தை வளர்த்தேன்”என ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.