டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் தனது முதுகு முழுக்க ராணுவத்தில் இறந்த 560 வீரர்களின் பெயர்களை பச்சைக் குத்தியுள்ளார்.
உடம்பில் பச்சைக் குத்திக்கொள்ளும் பழக்கம் உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே பொதுவான ஒன்றாக பார்க்கப்படுகிறது. சிலர் தனது காதலர்/காதலி பெயரை பச்சை குத்திக்கொள்வார்கள். பலர் தனது அம்மா/அப்பா பெயரை பச்சைக் குத்துவார்கள். சிலர் விசித்திரமான சின்னங்கள் மற்றும் ஸ்டைலுக்காக பச்சை குத்துவார்கள். ஆனால் டெல்லியில் உள்ள ஹபுரை சேர்ந்த 30 வயது இண்டீரியர் டிசைனரான அபிஷேக் கெளதம் என்பவர், தனது முதுகு முழுக்க 560 ராணுவ வீரர்களின் பெயரை பச்சை குத்தி வைத்துள்ளார்.
அந்த வீரர்கள் அனைவரும் கார்கில் போர் உட்பட, அண்மைக் காலம் வரை ராணுவ எல்லையில் உயிரிழந்தவர்கள் ஆவர். இதுதவிர மகாத்மா காந்தி, விவேகானந்தர், சுபாஷ் சந்திரபோஷ், அப்துல்கலாம், பகவத் சிங், ஜான்சி ராணி ஆகியோரின் புகைப்படங்களையும் சேர்த்து மொத்தம் 593 பச்சைகளை தனது முதுகில் குத்தியுள்ளார். இந்த பச்சைகளை அவர் குத்திக்கொள்வதற்கு 8 நாட்களாக ஆகியுள்ளது. ஒவ்வொரு நாளும் சுமார் 6 மணி நேரம் அதற்காக ஒதுக்கியுள்ளார்.
தான் பச்சைக்குத்திக் கொண்டது தொடர்பாக பேசிய அபிஷேக், “மக்கள் தங்கள் வாழ்க்கை துணையை பச்சைக் குத்திக்கொள்வார்கள். ஆனால் நான் எனது தேசத்தை விட பெரிதாக எதையும் விரும்பவில்லை. இந்த ராணுவம் நமக்காவே எல்லையில் இருக்கின்றனர். அங்கு நிறைய வீரர்கள் நாட்டிற்காக உயிரைக் கொடுத்துள்ளனர். அவர்களுக்கு அஞ்சலியுடன் மரியாதை செலுத்தவே நான் அவர்களின் பெயரை எனது முதுகில் பச்சை குத்தியுள்ளேன்” என்றார்.