பீகாரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது தொடர்பாக மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக பீகார் நீதிமன்றத்தில், மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீது பீகாரை சேர்ந்த சமூக ஆர்வலர் தமன்னா ஹாஷ்மி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
முசாபர்பூரில் உள்ள தலைமை நீதித்துறை நீதிமன்றத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு தொடர்ந்துள்ள தமன்னா ஹாஷ்மி, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவதில் "சதி" நடப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். அதே நேரத்தில் கச்சா எண்ணெயின் விலை மிகவும் குறைவாக உள்ளது என்பதை குறிப்பிட்ட அவர், பெட்ரோல், டீசல் விலை உயர்வு நாட்டு மக்களை பயமுறுத்துகிறது மற்றும் கோபமடைய செய்கிறது என தெரிவித்தார்.
இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பல்வேறு பிரிவுகளின் கீழ் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக விசாரணை நடத்த அவர் கோரிக்கை வைத்துள்ளார். இதில் 420 (மோசடி), 295 மற்றும் 295ஏ (வேண்டுமென்றே தீங்கிழைக்கும் செயல்கள்) மற்றும் 511 (குற்றம் செய்ய முயற்சித்தல்) ஆகிய பிரிவுகள் அடங்கும். இந்த மனு உரிய நேரத்தில் விசாரணைக்கு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமன்னா ஹாஷ்மி ஏற்கனவே பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக அரசியல்வாதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் ஏராளமான புகார்கள் அளித்திருக்கிறார்.