பேஸ்புக்கில் நண்பராக பழகி ரூ.47 லட்சம் மோசடி செய்த பெண் மீது புனே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
புனேவைச் சேர்ந்த 59வயதான ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் ஒருவரிடம் அமெரிக்காவைச் சேர்ந்த அந்தேஷியா ஸ்மித் என்ற பெண் ஒருவர் பேஸ்புக்கில் நண்பராகியுள்ளார். ஆரம்பம் முதலே நண்பர்களாக பேசி வந்த நிலையில் புனேவில் தொழில் தொடங்குவது குறித்து ஸ்மித் பேசியுள்ளார். புனேவில் ரியல் எஸ்டேட் தொடங்க ஆசையுள்ளதாகவும், அது குறித்து நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தலாம் என்று ஸ்மித் கேட்டுள்ளார். அவர்கள் 5 மாதங்கள் பேஸ்புக்கில் பேசிவந்த நிலையில் டெல்லி வந்த ஸ்மித்தை தங்கத்துடன் விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
இது குறித்து புனேவை சேர்ந்த ரியல் எஸ்டேட் ஏஜெண்டுக்கு விமான நிலைய அதிகாரிகள் பெயரில் தொலைபேசி மூலம் தகவல் கொடுக்கப்பட்டது. அதில் உங்கள் நண்பர் ஸ்மித், தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை விடுவிக்க வேண்டுமென்றால் ரூ.2.5 லட்சம் வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது. பின்னர் அடுத்தடுத்த தொலைபேசி அழைப்புகள் மூலம் பணம் அனுப்புமாறு கேட்கப்பட்டுள்ளது. அனைத்தையும் நம்பிய பாதிக்கப்பட்ட நபர் 37 தவணையில் ரூ.47 லட்சத்தை ஒரு குறிப்பிட்ட வங்கி கணக்குக்கு அனுப்பியுள்ளார்.
புகாரின் பேரில் வங்கி கணக்கை போலீசார் ஆய்வு செய்த போது பணம் குறிப்பிட்ட கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து சட்டவிதி 420 இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இணைய நண்பர்களை கண்ம்மூடித்தனமாக நம்பக்கூடாது என்றும், விழிப்புணர்வுடன் இணையத்தை பயன்படுத்தவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.