ஆங்கில புத்தாண்டு அன்று நள்ளிரவில் டெல்லியில் ஸ்கூட்டரில் வந்த பெண், மது போதையில் ஒருந்த இளைஞர் கும்பல் ஒன்று ஓட்டிய காரின் சக்கரத்தில் சிக்கி 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேல் இழுத்துச் செல்லப்பட்டதால் பரிதாபமாக இறந்தார்.
இந்த நிகழ்வின் சுவடே இன்னும் மறையாத வடுவாக இருக்கும் நிலையில் இதே பாணியிலான மற்றொரு சம்பவம் ஒன்று உத்தர பிரதேசத்தில் இன்று (பிப்.,07) அதிகாலை அரங்கேறியிருக்கிறது.
டெல்லியை சேர்ந்த விரேந்தர் சிங் என்ற நபர்தான் காரை ஓட்டி வந்தவர் என போலீசார் கூறியிருக்கிறார்கள். ஆக்ராவில் இருந்து நொய்டாவிற்கு இன்று அதிகாலை 4 மணியளவில் விரேந்தர் சிங் காரை ஓட்டி வந்த போதுதான் பாதிக்கப்பட்டவர் காருக்கு அடியில் சிக்கியிருக்கிறார்.
சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு இழுத்து வரப்பட்ட நிலையில் யமுனா விரைவுச்சாலை வழியாக மதுரா அருகே வந்த போதுதான் காவலர்களின் கவனத்துக்கு இந்த சம்பவம் வந்திருக்கிறது. இதனையடுத்து வண்டியை நிறுத்திய போதுதான் காருக்கு அடியில் சிதைந்த உடல் இருந்ததை முழுவதுமாக காண முடிந்திருக்கிறது.
பின்னர் காரை ஓட்டி வந்த விரேந்தர் சிங்கை கைது செய்து நடத்திய விசாரணையில், “விரைவுச் சாலை வழியாக வந்த போது அடர்த்தியான பனியாக இருந்ததால் சாலைகளே தெரியவில்லை. அப்போதுதான் எங்கேயோ விபத்துக்குள்ளான அந்த நபர் என் காருக்கு அடியில் சிக்கியிருக்கக் கூடும்” என தெரிவித்ததாக போலீசார் கூறியிருக்கிறார்கள். மேலும் இறந்த நபர் யார் என்பது குறித்து சிசிடிவி காட்சியை கொண்டு ஆராய்ந்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.