நடனம், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் நபர்கள், சமீபகாலமாக எதிர்பாராதவிதமாக திடீரென கீழேவிழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றன. அதிலும், கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் இளைஞர்கள்கூட மாரடைப்பால் திடீரென உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது.
அதிலும் குறிப்பாக, மாரடைப்பு காரணமாக 16 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட இளம் வயது மரணங்கள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே மீரா ரோடு பகுதியில் இளைஞர் ஒருவர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், புல்வெளி மைதானத்தில் பிங்க் நிற ஜெர்சி அணிந்த வீரர் ஒருவர் பேட்டிங் செய்கிறார். அப்போது அவர் பந்துவீச்சாளரின் பந்தை எதிர்கொண்டு அதை சிக்ஸருக்குத் தூக்குகிறார். பின்னர், அடுத்த பந்தை எதிர்கொள்ளத் தயாராகும் நிலையில், அப்படியே மயங்கி தரையில் சரிந்து விழுகிறார். இதைப் பார்த்த சக வீரர்கள் உடனே ஓடிச் சென்று முதலுதவி செய்ய முயல்கின்றனர். ஆனால், அதற்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. அவர், எந்த அசைவுமின்றி அப்படியே கிடக்கிறார்.
இந்த வீடியோ காட்சிகள் அங்கு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மயங்கி விழுந்து உயிரைவிட்ட அந்த வீரர் யார் என்ற விவரம் தெரியவில்லை. அதுபோல் அவருடைய இறப்பிற்கான சரியான காரணத்தைக் கண்டறிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நன்றாக விளையாடிக் கொண்டிருந்த வீரர் ஒருவர், மயங்கி விழுந்து உயிரிழந்திருப்பது சக வீரர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிக்க: T20 WC 2024 | டி20 வரலாற்றில் முதன்முறை.. புதிய சாதனை படைத்த நமீபியா பவுலர்!