அசாம் மாநிலத்தில் வெளிநாட்டவர் எனக் கூறி தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டவர் உயிரிழந்துள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி அசாம் மாநிலத்தில் என்.ஆர்.சி எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், என்.ஆர்.சி முடிவுகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தன. சுமார் 19 லட்சம் மக்கள் தங்களுக்கு உரிய ஆவணங்களை கொடுக்க முடியாமல் போனது. அவர்களை அனைவரும் வெளிநாட்டவர்கள் என அறிவிக்கப்பட்டனர். என்.ஆர்.சிக்கு எதிர்ப்பு கிளம்பவே மேற்கொண்டு ஆவணங்களை நிரூபிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வெளிநாட்டவர் என அறிவிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக அசாம் மாநிலத்தில் இதுவரை 6 தடுப்பு காவல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்கொண்டு 10 முகாம்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளன. 2008ம் ஆண்டு குவாகத்தி உயர்நீதிமன்ற உத்தரவுபடி முதல் தடுப்பு காவல் முகாம் அமைக்கப்பட்டது. இந்தத் தடுப்புக் காவல் முகாமில் தற்போது வரை சுமார் ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் அவ்வவ்போது உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், தடுப்புக்காவல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். உடல்நலக் குறைவு ஏற்பட்டதன் காரணமாக 10 நாட்களுக்கு முன்பு குவாகத்தியில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இவர் சேர்க்கப்பட்டார். இதவரையும் சேர்த்து, தடுப்பு காவல் முகாமில் தங்க வைக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் 29 ஆக உயர்ந்துள்ளன.