ஆன்லைனில் லூடோ என்ற விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்த போது இரும்பிய நண்பனை துப்பாக்கியால் சுட்ட இளைஞரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்தியாவில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவதை தடுப்பதற்காக மார்ச் 25 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை முதல் கட்டமாக அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனாவின் வீரியம் குறையாததால் அடுத்தக்கட்டமாக மே 3 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் என பிரதமர் மோடி நேற்று அறிவித்தார்.
ஊரடங்கு உத்தரவின் காரணமாக பெரும்பாலான இளைஞர்கள் செல்போனில் பலவிதமான கேம்களை விளையாடி பொழுதை கழித்து வருகின்றனர். அப்படிதான் டெல்லியை அடுத்த கிரேட்டர் நொய்டாவில் இருக்கும் கோயிலின் உள்ளே நான்கு இளைஞர்கள் லூடோ எனும் ஆன்லைன் கேம்மை விளையாடி வந்துள்ளனர். அப்போது பிரதீக் என்ற இளைஞர் தன்னுடைய நண்பனான சுரேஷ் அருகே சென்று இருமியுள்ளார். மேலும் தனக்கு கொரோனா இருப்பதாக கூறி வெறுப்பேற்றியுள்ளார்.
இதனால் கடும் கோபமடைந்த பிரதீக், தன் கையில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் சுரேஷை சரமாரியாக சுட்டுள்ளார். இந்தத் துப்பாக்கியின் வெடிச்சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், சுரேஷை மீட்டு நொய்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். துப்பாக்கியால் தன் நண்பனை சுட்ட பிரதீக் சம்பவ இடத்திலிருந்து தப்பிவிட்டார். அவரை நொய்டா போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.