லவ் ஜிஹாத் சட்டத்தின் கீழ் இஸ்லாமிய இளைஞரை கைது செய்ய அலகாபாத் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
உத்திரப்பிரதேசம் மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த நதீம் என்பவர் இந்து பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து அவர் மீது லவ் ஜிஹாத் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பெண்ணின் மதத்தை மாற்றும் நோக்கத்திற்காகவே அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், எனவே நதீமை லவ் ஜிஹாத் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை நதீம் மறுத்திருந்தார். தன் மீது வழக்கு ஒன்றில் நிலுவை தொகை பாக்கி இருப்பதால், இப்படி ஒரு புகார் வேண்டுமென்றே தன்மீது தெரிவித்ததாக கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ''லவ் ஜிஹாத் சட்டத்தின் கீழ் நதீமை கைது செய்வதற்கு தடை விதித்தனர். "காதலிப்பது தனி மனித சுதந்திரம். அதை தடுக்க முடியாது. அதேபோல, மதம் மாற்றுவதற்காகவே அந்த பெண்ணை காதலித்தார் என்று சொல்வதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை’’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
‘லவ் ஜிகாத்‘ என்ற பெயரில் இந்து பெண்கள் திருமணத்தின் மூலம் மதம் மாற்றப்படுவதாக பாஜக மற்றும் வலதுசாரி அமைப்புகளின் தலைவர்கள் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் பாஜக ஆட்சி புரியும் மத்தியப்பிரதேசம் மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்கள் ‘லவ் ஜிகாத்‘திற்கு எதிராக சட்டம் இயற்ற முடிவு செய்து உள்ளன.
அதேபோல், உத்தரப்பிரதேசத்திலும் லவ் ஜிகாத்திற்கு எதிரான அவசர சட்டம் பிறப்பிக்க சமீபத்தில் அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டப்படி, ஒருவரை திட்டமிட்டு காதலித்து, பின் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்து திருமணம் செய்தால், அந்த திருமணம் செல்லாது. அவ்வாறு திருமணம் செய்தவரை ஜாமினில் வர முடியாத சட்டப் பிரிவின் கீழ் கைது செய்து, ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க இந்த சட்டம் வகை செய்யும்.